ஊத்தங்கரையில் 12 ஆயிரம் புத்தகங்கள் மாயம்
ஊத்தங்கரையில் 12 ஆயிரம் புத்தகங்கள் மாயமானது தொடர்பாக கல்வி அலுவலக ஊழியர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
ஊத்தங்கரை
கல்வி அலுவலகம்
ஊத்தங்கரையில் வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வட்டார கல்வி அலுவலராக மாதம்மாள் (வயது 56) பணியாற்றி வருகிறார். கடந்த 20.10.2021 அன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக 29 ஆயிரத்து 265 புத்தகங்கள் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வந்தன.
இதில் 17 ஆயிரத்து 265 புத்தகங்கள் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டன. மீதம் உள்ள 12 ஆயிரம் புத்தகங்கள் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. கடந்த 4.4.2022 அன்று வட்டார கல்வி அலுவலர் மாதம்மாள் புத்தகங்களை ஆய்வு செய்தார்.
2 பேர் மீது வழக்கு
அப்போது அங்கிருந்த 12 ஆயிரம் புத்தகங்களும் மாயமானது தெரிந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ஆகும். இது தொடர்பாக கல்வி அலுவலர் மாதம்மாள் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார். அதில் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் பதிவேடு அறை எழுத்தராக பணியாற்றி வரும் தங்கவேல் (52), இளநிலை உதவியாளர் திருநாவுக்கரசு (37) ஆகிய 2 பேர் மீது சந்தேகம் உள்ளதாககூறியுள்ளார்.
அதன் பேரில் போலீசார் கல்வி அலுவலக ஊழியர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அவர்கள் மீது கல்வித்துறை சார்பில் துறை ரீதியான விசாரணையும் நடந்து வருகிறது.