தமிழகத்தில் ஆண்டுதோறும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் வரை அதிகரிப்பு-முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பேட்டி
தமிழகத்தில் ஆண்டுதோறும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 12 சதவீதம் வரை அதிகரித்து வருவதாக வருமான வரித்துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்;
பேட்டி
சேலம் காந்தி ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் வருமான வரித்துறை தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டுபேசினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி வரி வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை 53 சதவீதம் வசூலாகி உள்ளது. தமிழகம், புதுச்சேரியை பொறுத்தவரையில் வருமான வரி வசூல் 32 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
அகில இந்திய அளவில் வளர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி 3-வது இடத்திலும், வரி வசூலில் 4-ம் இடத்திலும் உள்ளன. அதிகபட்சமாக டி.டி.எஸ். மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. அதன் வளர்ச்சி 28 சதவீதமாக உள்ளது.
ரூ.900 கோடி இலக்கு
தமிழகத்தில் சேலம் மண்டலத்தை பொறுத்தவரை வருமான வரி வசூலுக்கு ரூ.900 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 67 லட்சம் பேர் வருமான வரி செலுத்தி வருகின்றனர். வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 12 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் இந்தாண்டு வருமான வரி வசூல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
வரி ஏய்ப்பு தொடர்பாக எங்களுக்கு பல தகவல்கள் வந்து கொண்டிருகின்றன. குறிப்பாக 60 ஏஜென்சிகளிடம் இருந்து தகவல்கள் பெற்று வருகிறோம். ரூ.30 லட்சத்துக்கு மேல் சொத்துகள் வாங்கினாலோ அல்லது வங்கி பணப்பரிவர்த்தனை உள்ளிட்டவை குறித்து எங்களுக்கு தகவல்கள் வந்துவிடும். எனவே வரி ஏய்ப்பு என்பது குறைந்துள்ளது. அதையும் மீறி வரி ஏய்ப்பு செய்தால் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதன் மூலம் நல்ல பலன்கள்கிடைத்தது.
தண்டனை
யார் வரி ஏய்ப்பு செய்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடைக்க கூடும். வருமான வரித்துறையில் உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். வெளிநாடுகளில் இருந்து அரசு அனுமதியின்றி நன்கொடை பெற்றாலும் அதுதொடர்பான தகவல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால நேரத்திற்குள் அனைவரும் வரி செலுத்த வேண்டும்.
இவ்வாறு வருமான வரித்துறை தமிழ்நாடு, புதுச்சேரி முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.