அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு 'சீல்' - சாலை மறியல் செய்த பெண்கள் உள்பட 12 பேர் கைது

எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் கிராமத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் செய்து பெண்கள் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-29 09:39 GMT

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், மதுரைவாசல் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான வேணுகோபால சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 35 சென்ட் நிலத்தில் 9 குடும்பத்தார் சுமார் 30 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வந்தனர். ஆக்கிரமிப்பு செய்து கட்டிய வீடுகளை அகற்றுமாறு இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் 2017-ம் ஆண்டு கோர்ட்டில் உத்தரவு பெற்றார். எனவே அங்கு வசித்து வரும் 2 குடும்பத்தார் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில் கோவில் நிலத்தை மீட்க 6 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவு வாங்கியும் அங்குள்ள வீடுகள் அகற்றப்படாததால் வேலூர் இணை ஆணையர திருவள்ளூர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து நேற்று பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்புடன் வருவாய் அலுவலர் பெருமாள் முன்னிலையில் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கோவில் இடத்தில் கட்டப்பட்டு இருந்த 7 வீடுகளை பூட்டி 'சீல்' வைத்தார்.

இதனால் அந்த வீட்டில் குடியிருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக கிராம மக்கள் சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 12 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்