12 மணி நேரம் போதையில் வைத்திருக்கும் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை - வடமாநில வாலிபர்கள் 2 பேர் கைது

பெருந்துறையில் கஞ்சா சாக்லெட்டுகள் விற்பனை செய்த 2 வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2022-07-14 15:47 IST

பெருந்துறை,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை போலீசாருக்கு இன்று காலை ரகசியத் தகவல் ஒன்று வந்தது. அதில் வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர் பணிக்கம்பாளையம் பகுதியில் குட்கா, ஹான்ஸ் மற்றும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்ய வந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், அங்கு கையில் பையுடன் நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் சோதனை செய்ததில், 240 கிராம் எடை கொண்ட 2 புகையிலைப் பாக்கெட்டுகளும், கஞ்சா கலந்த 30 சாக்லெட்டுகளும் இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து இவர்களை இரண்டு பேரையும் கைது செய்து பெருந்துறை போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை நடத்தினர். அப்போது பல அதிர்ச்சி தகவல் வெளிவந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில்,

பெருந்துறை பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள் மேற்கு வங்காளம் ராகுல் மண்டேல்(வயது21), ஓடிசா சந்தோஸ்குமார் என்பது தெரியவந்துள்ளது.

இவர்களிடம் நடத்திய விசாரணையில், சாதாரணமாக குட்கா,ஹான்ஸ் முதலான புகையிலை பொருட்களை பயன்படுத்துவோருக்கு, சிறிது நேரம் போதை மயக்கம் இருக்கும், அதற்குப் பதிலாக கஞ்சா கலந்த சாக்லெட்டை வாயில் வைத்து சுவைத்தால்,12 மணி நேரத்திற்கும் மேலாக போதை இருக்கும் என்று கூறினார்களாம். இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனால் அவர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்