பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை 11,377 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
கரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வினை 11,377 மாணவ-மாணவிகள் எழுதவுள்ளனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாரானது. .
பொதுத்தேர்வு
தமிழகத்தில் பிளஸ்-2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 3-ந்தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை 43 தேர்வு மையங்களில் 106 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 5 ஆயிரத்து 503 மாணவர்களும், 5 ஆயிரத்து 874 மாணவிகளும் என மொத்தம் 11,377 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 51 மாணவ, மாணவிகளும் என 11,428 பேர் தேர்வெழுத உள்ளனர்.
43 மையங்கள்
பிளஸ்-1 பொதுத்தேர்வினை கரூர் மாவட்டத்தில் 43 தேர்வு மையங்களில் 106 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9 ஆயிரத்து 833 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 205 மாணவ, மாணவிகள் என 10 ஆயிரத்து 38 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 60 தேர்வு மையங்களில் 12 ஆயிரத்து 162 மாணவ, மாணவிகளும், தனித்தேர்வர்களாக 693 மாணவ, மாணவிகள் என 12 ஆயிரத்து 855 மாணவ, மாணவிகள் தேர்வெழுத உள்ளனர்.
பறக்கும்படை
பொதுத்தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 46 தலைமை ஆசிரியர்களும், 46 துறை அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக பணியாற்ற 793 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு மாவட்ட கலெக்டர் தலைமையிலும், கல்வி அலுவலர்கள் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பறக்கும் படையினர் தேர்வு மையங்களை எந்த நேரத்திலும் திடீர் பார்வையிட்டு ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவோர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்வர். மேல்நிலை பொதுத்தேர்விற்கு 91 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு 150 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படையும் அமைக்கப்பட்டுள்ளன. இணைஇயக்குனர் தலைமையிலும் பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.
தயார்நிலை
இந்நிலையில் பிளஸ்-2 பொதுத்தேர்வினை முன்னிட்டு தேர்வு நடைபெற உள்ள தேர்வு மையங்களில் மேஜைகள், வரிசைப்படுத்தும் பணி, மேஜைகளில் மாணவர்களின் பதிவு எண் ஒட்டும் பணி, வகுப்பறையில் தேர்வு எழுதும் மாணவர்களின் பதிவு எண் விவரங்கள் ஒட்டும் பணி உள்ளிட்ட முன்னேற்பாட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று தேர்வு மையங்கள் தயார்நிலையில் உள்ளனர்.