ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 11 பவுன் நகைகள் கொள்ளை
விருத்தாசலத்தில் பட்டப்பகலில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் 11 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் ஜான்சிராணி தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் (வயது 61). ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர். இவர் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி ஜெசிந்தா மேரியுடன் விருத்தாசலம் பாத்திமா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற ஆண்டு பெருவிழாவில் கலந்து கொள்ள சென்றார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் மதியம் வீட்டுக்கு சென்றனர்.
அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் ஒரு அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ஆரோக்கியதாஸ் வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அவரது வீட்டுக்குள் புகுந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள நகையை கொள்ளையடித்து சென்றது தெரிந்தது.
வலைவீச்சு
தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடந்த வீட்டில் இருந்ததடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்ட பகலில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீ்ட்டில் நடந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.