கசிநாயக்கன்பட்டி எருது விடும் விழாவில் மாடுகள் முட்டி 11 பேர் காயம்

கசிநாக்கன்பட்டியில் நடந்த எருதுவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2023-01-21 14:10 GMT

கசிநாக்கன்பட்டியில் நடந்த எருதுவிடும் விழாவில் மாடுகள் முட்டியதில் 11 பேர் காயம் அடைந்தனர்.

காளைவிடும் விழா

திருப்பத்தூர் அருகே கல்நார்சம்பட்டி மாடு விடும் திருவிழாவில் மாடு முட்டி வாலிபர் இறந்தார்.

இதனால் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கலவரத்தில் ஈடுபட்டு போலீசார் மீது கல்வீசினர். இந்த சம்பவத்தில் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் எருதுவிடும் விழாக்கள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. அதன்பின் எருது விடும் விழா குழுவினருடன் போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகம் விழாவில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விளக்கி கூறி எழுத்துப்பூர்வமாக எழுதி வாங்கிக்கொண்டு காளை விடும் விழாவுக்கு அனுமதி அளித்தனர்.

300 போலீசார் குவிப்பு

அதன்படி கசிநாயக்கன்பட்டி கிராமத்தில் நேற்று காலை 8.30 மணிக்கு எருதுவிடும் விழா தொடங்கியது. போலீஸ் சூப்பிரண்டு பி.பாலகிருஷ்ணன் நேரில் எருது விடும் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, வெள்ளக்குட்டை, பர்கூர், ஊத்தங்கரை, ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 170 காளைகள் பங்கேற்றன காளைகள் ஓடும் வீதியின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தன திருவிழா தொடர்வதற்கு முன்பு கால்நடை இணை கால்நடைகளை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் 2 காளைகள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.காளை விடும் விழாவுக்கு ஊர் கவுண்டர் கே.ஜி.பூபதி, தி.மு.க. கந்திலி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.ஏ.மோகன்ராஜ் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் தலைமை வகித்தனர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கே.டி.கோவிந்தராஜ், கே.எம்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ஆர்.ஆறுமுகம் வரவேற்றார்.விழாவை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. அவை சீறிப் பாய்ந்து ஓடின. அப்போது இருபுறமும் நின்று இருந்த பொதுமக்கள் காளைகளை உற்சாகப்படுத்த காளைகள் மீது கைகளை வைத்து தட்டினார்கள்.

11 பேர் காயம்

காளைகள் முட்டியதில் 11 பேர் காயமடைந்தனர். இதில் ஜோதிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சவுந்தர் மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதில் குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளுக்கு ரூ.50 ஆயிரம் முதல் பல்வேறு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டது.

போலீசார் பாதுகாப்பு

விழாவையொட்டி 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கண்காணிப்பு கேமரா அமைத்து போலீசார் எருது வரும் பாதையை கண்காணித்தனர்.

கோட்டாட்சியர் லட்சுமி மற்றும் வருவாய்த்துறையினர் நேரடி கண்காணிப்பில் விழா நடைபெற்றது

நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமிபூபதி, ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். முடிவில் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் இசைவாணி கார்த்திகேயன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்