அரசு மகளிர் பள்ளி 2-வது மாடியில் இருந்து குதித்த 10-ம் வகுப்பு மாணவி

திருப்புவனத்தில் அரசு மகளிர் பள்ளியில் கைநரம்பை அறுத்துக்கொண்டு 2-வது மாடியில் இருந்து 10-ம் வகுப்பு மாணவி குதித்தார்.;

Update: 2022-08-16 16:52 GMT

திருப்புவனம், 

திருப்புவனத்தில் அரசு மகளிர் பள்ளியில் கைநரம்பை அறுத்துக்கொண்டு 2-வது மாடியில் இருந்து 10-ம் வகுப்பு மாணவி குதித்தார். அங்குள்ள தனியார் பள்ளிக்கு, விஷம் குடித்துவிட்டு சென்ற பிளஸ்-2 மாணவனாலும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவங்கள் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் தெப்பக்குளம் பின்புறம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.

திருப்புவனத்தில் வடகரையை சேர்ந்த சரவண கண்ணன் என்பவருடைய மகள் யாஷிகா (வயது 15). இவர் அந்த பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

தற்போது 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிக்கூடத்தில் சில நாட்களாக தேர்வு நடந்து வருகிறது.  3-ம் நாள் தேர்வு நடைபெற இருந்தது. இந்நிலையில் காலை 9 மணி அளவில் மாணவி யாஷிகா பள்ளிக்கு வந்தார்.

பின்னர் 2-வது மாடிக்கு சென்ற அவர், கழிப்பறையில் பிளேடால் தனது கை நரம்புகளை அறுத்துக்கொண்டதாக தெரியவருகிறது.

ரத்தம் சொட்டச்சொட்ட நின்ற யாஷிகாவை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஒரு மாணவி அலறினாள். இதுகுறித்து ஆசிரியையிடம் தெரிவிக்க ஓடினாள். அந்த நேரத்தில் யாஷிகா 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு விசாரணை

உடனே ஆசிரியர்கள் மாணவியை திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் மற்றும் போலீசார், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சுவாமிநாதன், திருப்புவனம் தாசில்தார் கண்ணன், யூனியன் ஆணையாளர் ராஜசேகரன் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரும் நேரில் வந்து சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

மாணவி பள்ளி கழிவறை சுவரில் "சாரி அம்மா" என ஆங்கிலத்தில் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

மற்றொரு சம்பவம்

அரசு மகளிர் பள்ளியில் மாணவி மாடியில் இருந்து குதித்த சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருந்த நிலையில், மற்றொரு சம்பவமாக அதே ஊரில் நயினார்பேட்டை செல்லும் வழியில் ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 மாணவர் விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு வந்திருப்பதாக தகவல் வந்தது. உடனே அந்த பள்ளிக்கு அதிகாரிகள் விரைந்து சென்றனர்.

திருப்புவனம் வடகரை பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவருடைய மகன் அபிமன்யு (17). பிளஸ்-2 மாணவரான இவர், நேற்று பள்ளிக்கு வந்த நேரம் முதலே சோர்வாக இருந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரியர்கள் அவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் விஷம் குடித்துவிட்டு வந்ததாக கூறியுள்ளார்.

அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துவிட்டு அபிமன்யுவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மற்றும் போலீசார், அந்த தனியார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

காரணம் என்ன?

இது குறித்து மாணவியின் தாயார் முத்திருளாயி திருப்புவனம் போலீசில் கொடுத்துள்ள புகாரில், "தனது மகள் தேர்வுக்கு ஒழுங்காக படிக்கவில்லை என்பதால் பயந்து மாடியிலிருந்து குதித்துள்ளார்" என கூறியுள்ளார்.

மாணவனின் தந்தை கண்ணன் போலீசில் கொடுத்துள்ள புகாரில், "தாய் திட்டியதால் அபிமன்யு விஷம் குடித்துவிட்டு பள்ளிக்கு சென்றுள்ளார்'' என கூறியுள்ளார்.

இந்த சம்பவங்கள் திருப்புவனத்தில்  பரபரப்பாக பேசப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்