கும்மிடிப்பூண்டி அருகே 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே 10-ஆம் வகுப்பு பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள சிறுவாடா கிராமத்தில் வசித்து வருபவர் ரகு (வயது 39). இவரது மகள் ராகவி (15) கண்ணன்கோட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் மாணவி ராகவி வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்த தகவலின் பேரில் பாதிரிவேடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து மாணவி ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவி தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு பள்ளி மாணவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோழவரம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட அருமந்தை கிராமம் மேடங்குளம் பகுதியில் வசித்து வந்தவர் அமிர்தலிங்கம் (வயது 48). கூலித்தொழிலாளி. இவர் அங்கு தனியாக வசித்து வந்தார். 3 நாட்களாக வீடு திறந்த நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் சோழவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அமிர்தலிங்கம் இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனே அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அமிர்தலிங்கம் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.