8 ஆண்டுகளுக்கு பிறகு மாணவருக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்; நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை
8 ஆண்டுகளுக்கு பிறகு மாணவருக்கு 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்க நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை மேற்கொண்டது.
பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் கென்னடி தெருவை சேர்ந்தவர் பெனடிக்ட். இவருடைய மகன் ஜீரா. இவர் கடந்த 17-ந் தேதி நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்தார். அதில், 'நான் ஒரு பள்ளியில் 2015-16-ம் கல்வி ஆண்டில் 10-ம் வகுப்பு படித்தேன். பொதுத்தேர்வில் கணக்கு, அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தேன். பின்னர் 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த துணைத்தேர்வில் தேர்வு எழுதி வெற்றி பெற்றேன். அதற்குரிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதனை கொண்டு பிளஸ்-1, பிளஸ்-2 படித்தேன். இந்த நிலையில் 10-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழை சம்பந்தப்பட்ட பள்ளிக்கூடம் மற்றும் கல்வி அலுவலகத்தில் கேட்டேன். ஆனால் கல்வி அலுவலகத்தில் பழைய சான்றிதழ் எரிந்து விட்டதாகவும், நகல் சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.500 கட்டணம் செலுத்துமாறும் கூறினார்கள். அதன்படி கட்டணம் செலுத்திய பிறகும் மதிப்பெண் சான்றிதழ் தரவில்லை. எனவே மதிப்பெண் சான்றிதழை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறிஇருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சமீனா, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்தினார். அப்போது பள்ளி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை துணை இயக்குனர் ஆகியோர் ஆஜராகி, 10-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய சங்கரன்கோவில் மேல்நிலைப்பள்ளியில் மதிப்பெண் சான்றிதழ் இருப்பதாகவும், அங்கு நேரில் சென்று விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்கள். அதன்படி ஜீவா சங்கரன்கோவிலில் உள்ள பள்ளிக்கு சென்று 10-ம் வகுப்பு துணைத்தேர்வுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொண்டார். நேற்று அவர் நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி சமீனாவிடம், அந்த சான்றிதழை காண்பித்து பெற்றுக் கொண்டார்.