சுப்பிரமணிய சாமி கோவிலில் 108 பால்குட ஊர்வலம்
வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.;
காட்பாடியை அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி பக்தர்கள் 108 பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மலையடி வாரத்தில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக பால்குடம் எடுத்து சென்று, மலைக்குகை கோவிலில் உள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு தீப ஆராதனை நடந்தது.
மலை அடிவாரத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத ஆறுமுகசாமிக்கு அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, சாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்து. வள்ளி தெய்வானைக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இரவு சுமார் 7 மணி அளவில் உற்சவ மூர்த்திகளான வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி சிறப்பு அலங்காரத்தில் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வைகாசி பவுர்ணமியை முன்னிட்டு ஆறுமுகசாமிக்கு விபூதி காப்பு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலையில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.