சென்னை ராயப்பேட்டையில் ரூ.1.05 கோடியில் விளையாட்டு மையம்

சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் ரூ.1.05 கோடி மதிப்பில் திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-12-20 23:19 GMT

சென்னை,

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சென்னை ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில், ஒரு கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருங்கிணைந்த திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டு மையம் அமைக்கும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து, ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பம்பிங் ஸ்டேசன் சாலை மற்றும் ரிச்சி தெரு சந்திப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிவறையினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், வார்டு 62-ல் சுயமுயற்சி திட்டத்தின் கீழ், மகளிர் சுயஉதவிக் குழுக்களால் அமைக்கப்பட்டுள்ள நம்ம சந்தை கடையையும் திறந்து வைத்தார். இந்த கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்ம சந்தை கடை

மேலும், நம்ம சந்தை கடையில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், சொந்தமாக பை மற்றும் பாத்திரங்களை கொண்டு வந்து ரூ.50-க்கு மேல் பொருட்களை வாங்கிச் செல்லும் நபர்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடியும், பயன்படுத்திய பால் பாக்கெட்டுகள், லேஸ் மற்றும் சிப்ஸ் பாக்கெட்டுகளை சேகரித்து, சுத்தப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு 10 பாக்கெட்டுகளுக்கு தலா 5 சதவீதம் தள்ளுபடியும், பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டில்களை சுத்தப்படுத்தி கொண்டு வருபவர்களுக்கு 2 பாட்டில்களுக்கு ஒரு ரூபாயும் வழங்கப்படுகிறது.

இதேபோன்று, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புறக்காவல் நிலையத்தினையும் பயன்பாட்டிற்காக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். சேப்பாக்கம் நடுக்குப்பம் மற்றும் நீலம் பாஷா தர்கா தெருக்களில் ரூ.1.25 கோடி மதிப்பிலான புதிய சாலையோர கழிவுநீரேற்று நிலையம் அமைக்கும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

கழிவுநீரேற்று நிலையம்

இத்திட்டப் பணிகளின் மூலம் சாலையோர கழிவுநீரேற்று நிலையங்கள் அமைத்தல் மற்றும் 230 மீட்டர் நீளத்திற்கு புதிதாக கழிவுநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற உள்ளன. மேலும், பழைய கழிவுநீர் அமைப்பினை இணைக்கும் பணிகளும், 370 மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணிகளும் நடைபெறும். இதன் மூலம் 3 ஆயிரம் மக்கள் பயன் அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சிகளின்போது, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) சிற்றரசு, மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி தெரிவித்த பெற்றோர்

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத்தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுவனை சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிகழ்வின்போது அச்சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக, அமைச்சரின் அலுவலகத்தில் சிலம்பம் விளையாட்டிற்கு உபகரணங்கள் வேண்டி மனு அளித்திருந்த நபர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அதனைத்தொடர்ந்து, பேராசிரியர் க.அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட சி.என்.கே.சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 500 பேருக்கு மிக்சி, கிரைண்டர் மற்றும் சமையல் கியாஸ் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்