அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலச பூஜை தொடங்கியது

அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலச பூஜை தொடங்கியது.

Update: 2023-05-27 17:36 GMT

அக்னி நட்சத்திரம் நிறைவையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 1,008 கலச பூஜை தொடங்கியது.

விக்னேஸ்வர பூஜை

திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்தாண்டு கோடை வெயில் தொடங்கும் முன்பு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனும் கத்தரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கினாலும், கோடை மழை இருந்ததால் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

கோடை மழை குறைந்ததும் அக்னி நட்சத்திர வெயில் தன்னுடைய உக்கிரத்தை காட்டியது. இதனால் கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் சாலைகளில் கானல்நீர் தோன்றியது. மேலும் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.

இதற்கிடையில் அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தாராபிஷேகம் நடந்து வருகிறது. அக்னி நட்சத்திரம் நிறைவடைவதை யொட்டி அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடைபெறும்.

இதை முன்னிட்டு நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் காலை 7.30 மணி அளவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. பின்னர் இரவு 8 மணி அளவில் 1,008 கலச பூஜை ஹோமம் மற்றும் பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடைபெற்றது.

கலசாபிஷேகம்

தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) 2-ம் கால 1,008 கலச பூஜையும், தீபாராதனையும், மாலையில் 3-ம் கால 1,008 கலச பூஜையும் நடக்கிறது.

இதனையடுத்து நாளை காலை 7 மணிக்கு 4-ம் கால 1,008 கலச பூஜை, 10 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, 11 மணிக்கு 1,008 கலசாபிஷேகம் மற்றும் இரவில் சாமி திருவீதி உலா நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) குமரசேன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்