மீட்கப்பட்ட 100 பேர், புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கவைப்பு

கொள்ளிடம் ஆற்று வெள்ளம் கிராமங்களுக்குள் புகுந்ததால் 100 பேர் மீட்கப்பட்டு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு படகில் சென்று குடிநீர், உணவு வழங்கப்பட்டது.

Update: 2022-08-31 18:19 GMT

அண்ணாமலை நகர், 

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து, அதன் வழியாக கடலில் கலக்கிறது.

இதில் கீழணையில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்டது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கன அடி வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று வினாடிக்கு 1 லட்சத்துக்கு 27 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனிடையே கொள்ளிடம் ஆற்றங்கரை பல இடங்களில் வலுவிழந்து காணப்பட்டது. இதையடுத்து ஆற்றில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அங்கு கற்களை கொட்டி கரைகளை பலப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

படகு மூலம் உணவு

இதனிடையே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடந்த 2 நாட்களாக ஆற்றின் கரையோரம் உள்ள பெராம்பட்டு, மடத்தான்தோப்பு, கீழக்குண்டலப்பாடி, ஜெயங்கொண்டப்பட்டினம், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம், திட்டுக்காட்டூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்வு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் 100-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஜெயங்கொண்டப்பட்டினம், அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம் ஆகிய கிராமங்களுக்கு நேற்று காலை சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ், விருத்தாசலம் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் இன்பா, குமராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் இப்ராகிம் ஆகியோர் படகுகளில் சென்று அங்கு புயல் பாதுகாப்பு மையங்களில் தங்கி இருக்கும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்