தமிழகம், கேரளாவில் போதை மருந்து விற்பனையில் 100 இடைத்தரகர்கள்
தமிழகம், கேரளாவில் போதை மருந்து விற்பனையில் 100 பேர் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளதாக போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.;
போதை மருந்து
தேனி மாவட்டம், சின்னமனூரில் போதை ஊசி விற்பனை மற்றும் பயன்படுத்திய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் திருச்சி கருமண்டபத்தை சேர்ந்த ஜோனத்தன் மார்க் (வயது 30) என்பவரே இந்த போதை மருந்து விற்பனையை செய்து வந்துள்ளார். இதற்காக அவர் ஒரு தனியார் மருந்து விற்பனை நிறுவனம் தொடங்கி, அந்த நிறுவனத்தின் பெயரில் ஊக்க மருந்துகளை மொத்தமாக கொள்முதல் செய்து, தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கும், கேரளா, புதுச்சேரி பகுதிகளுக்கும் கடத்தி வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
வலைத்தளம் மூலம் இளைஞர்கள், மாணவர்களுக்கு போதை மருந்துகளின் தேவையை முன்பதிவு செய்ய வைத்து, கூகுள்பே மூலம் பணத்தை பெற்று பஸ்கள் மூலம் போதை மருந்துகளை அனுப்பி வைத்துள்ளனர்.
100 இடைத்தரகர்கள்
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, போலீசாரையே அதிர்ச்சி அடையச் செய்து வருகிறது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கேட்டபோது, கைதான ஜோனத்தன் மார்க், நடத்திய நிறுவனத்தின் மருந்து விற்பனை இணையதளம் எளிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் போதே செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவர்களின் விவரங்களை சரிபார்க்கவே ஒவ்வொரு மாவட்டத்திலும் இடைத்தரகர்கள் செயல்பட்டதாக தெரியவருகிறது.
சமூக வலைத்தளம்
அந்த வகையில் தமிழகம் மற்றும் கேரளாவில் 100-க்கும் மேற்பட்டவர்கள் இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளனர். அவர்கள் போதை மருந்துகளை வாங்கி, மற்றவர்களுக்கும் வினியோகம் செய்து வந்துள்ளனர். இதற்காக வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் குரூப்கள் உருவாக்கியும் விற்பனை செய்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த போதை பழக்கத்துக்கு அடிமையான நபர்கள் சிலரே இடைத்தரகர்களாக செயல்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 10 மில்லிலிட்டர் அளவுள்ள இந்த போதை மருந்தை ஒரு பாட்டில் ரூ.250 முதல் ரூ.300 வரை கொள்முதல் செய்து, அதை இடத்துக்கு ஏற்ப அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த மருந்தை போதைக்காக பயன்படுத்தும் போது உடலுக்கு பல்வேறு தீங்குகள் ஏற்படும்.
இவ்வாறு போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரண்மனை புதூரை சேர்ந்த சாய் அக்சய் கவுடா (22), சின்னமனூரை சேர்ந்த நவீன் (22), ஜாகிர் உசேன் (22), ஓடைப்பட்டியை சேர்ந்த பாரத் (21) பெரியகுளத்தை சேர்ந்த உதயகுமார் (21), போதை மருந்தை வினியோகம் செய்த மதுரையை சேர்ந்த குணநாதன் ஆகிய 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.