திருச்சியில் 100 அடி உயர தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றும் பணி தொடக்கம்
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர தி.மு.க. கொடிகம்பம் கோர்ட்டு உத்தரவால் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.;
திருச்சி - புதுக்கோட்டை சாலையில் அமைக்கப்பட்டிருந்த 100 அடி உயர தி.மு.க. கொடிகம்பம் கோர்ட்டு உத்தரவால் அகற்றும் பணிகள் தொடங்கியுள்ளது.
100 அடி உயர கொடிக்கம்பம்
திருச்சி-புதுக்கோட்டை சாலையில் குண்டூர் அருகே துப்பாக்கித்தொழிற்சாலை செல்லும் சாலை சந்திப்பில் சுமார் 100 அடி உயர ராட்சத கொடி கம்பம் தி.மு.க. சார்பில் நடப்பட்டிருந்தது. இது பொதுமக்கள் மற்றும் வாகனப்போக்குவரத்து அதிகளவில் பயன்பாட்டில் உள்ள இடம் என்பதால், இதை அகற்ற சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி, அதை 15 நாட்களில் அகற்ற மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார். ஆனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அகற்றும் பணி
அப்போது, மனுதாரர் தரப்பில், நீதி மன்றம் உத்தரவிட்டும் தி.மு.க. கொடிக்கம்பம் அகற்றப்பட வில்லை எனவும், ஆளுங்கட்சியாக தி.மு.க. உள்ளதால் கலெக்டர் கொடிக்கம்பத்தை அகற்றவில்லை என்றும் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், ஆளுங்கட்சி கொடிக்கம்பம் என்பதால் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் இருப்பதை அனுமதிக்க முடியாது, எனவே உடனே கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று கோர்ட்டு கடந்த வாரம் மறுஉத்தரவு பிறப்பித்தது.
மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அந்த கொடிக்கம்பத்தை தி.மு.க. கட்சியினரே அகற்றும் பணியை தொடங்கினர். நேற்று அதில் இருந்த கல்வெட்டுகள் அகற்றப்பட்டன. இன்னும் ஓரிரு நாட்களில் கொடிக்கம்பம் முழுவதுமாக அகற்றப்பட்டு வேறு இடத்தில் அமைக்கப்படும் என தி.மு.க.வினர் தெரிவித்துள்ளனர்.