ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் அமைய உள்ள 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-05-23 11:57 GMT

இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடகல் கிராமத்தில் 100 படுக்கைகள் கொண்ட இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி அமைய உள்ளது.

இதற்கு மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு - சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் பூபேந்தர் யாதவ் மற்றும் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு - பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி ஆகியோர் நேற்று அடிக்கல் நாட்டினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் இ.எஸ்.ஐ. தலைமை நிர்வாக இயக்குனர் முக்மேத் பாட்யா, இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு கூடுதல் செயலாளர் டாக்டர் ஷஷாங்க் கோயல், தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாடு செயலாளர் கிரிலோ ஷ் குமார், முதன்மை தொழிலாளர் ஆணையர் அதுல்யா ஆனந்த், காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, காஞ்சீபுரம் மாவட்ட பா.ஜ.க. தலைவர் கே.எஸ்.பாபு, வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் விமலாதேவி தர்மா, மாவட்ட பா.ஜ.க. செயலாளர் பார்த்தசாரதி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரூ.155 கோடி செலவில்

நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பூபேந்தர் யாதவ் கூறியதாவது:-

தற்போது காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் வல்லம் வடகல் கிராமத்தில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி 5.12 ஏக்கர் பரப்பளவில் ரூ. 155 கோடி செலவில் அமைய உள்ளது. முக்கியமாக சிப்காட் கிரீம்ஸ் சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த ஆஸ்பத்திரி பயனாளிகள் எளிதாக அணுகும் வகையில் இருக்கும்.

இந்த ஆஸ்பத்திரியில் விபத்து பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, மருந்தகம், மக்கள் மருந்தகம், கதிரியக்கவியல், அதிநவீன அறுவை சிகிச்சை அரங்குகள், எலும்பு சிகிச்சை, பல் மருத்துவம், காது, மூக்கு, தொண்டை மற்றும் உள் நோயாளிகள் பிரிவு போன்ற அனைத்து அதிநவீன சேவைகளும் அமைய உள்ளது. இந்த ஆஸ்பத்திரி மூலம் 8 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் பயனடைவர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்