100 ஆதிதிராவிடர் பழங்குடியினர் குடும்பங்களுக்கு ரூ1¼ கோடி உதவித்தொகை

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 22 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகன் தெரிவித்தார்;

Update: 2022-10-01 18:45 GMT

விழுப்புரம்

கண்காணிப்புக்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். துரைரவிக்குமார் எம்.பி., சிவக்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் மோகன் கூறியதாவது:-

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட...

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினருக்கான வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் பாதிப்புக்கு உள்ளான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பத்தினருக்கு அரசின் மூலம் உதவித்தொகை வழங்க விழுப்புரம் மாவட்டத்திற்கு ரூ.1 கோடியே 30 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட 51 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு பாதிக்கப்பட்ட 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடியே 22 லட்சத்து 75 ஆயிரம் உதவித்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. இதில் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் 28 வழக்குகளுக்கு ரூ.69 லட்சத்து 50 ஆயிரமும், குற்றப்பத்திரிக்கை நிலையில் 23 வழக்குகளுக்கு ரூ.53 லட்சத்து 25 ஆயிரமும் என மொத்தம் ரூ.1.22 கோடி வழங்கப்பட்டுள்ளது.

அரசு வேலை

மேலும் வன்கொடுமையால் பாதிப்புக்குள்ளாகி இறந்த 15 ஆதிதிராவிடர் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்து 95 ஆயிரத்து 750 பஞ்சப்படியாகவும், அவர்களின் 4 வாரிசுதாரர்களுக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா, வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, திண்டிவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்குப்தா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ரகுகுமார், விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் ராஜசேகரன், மோகன், அகத்தியன், ஆறுமுகம், குமரவேல், தனஞ்செழியன், மணி, சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்