ரூ.10 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை

ரூ.10 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை

Update: 2022-11-18 18:45 GMT


ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்த பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை டான்பிட் கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

ஈமு, நாட்டுக்கோழி பண்ணை

திருப்பூர் மாவட்டம் பொன்கோவில் நகரில் ஜோதிவேல் ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை செயல்பட்டு வந்தது. இதன் இயக்குனராக அமுல் (வயது 35) என்பவர் செயல்பட்டு வந்தார். இந்த பண்ணையில் முதலீடு செய்தால் 2 திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் அவர்களே செட்போட்டு 300 கோழிக்குஞ்சு, தீவனங்களை கொடுத்து மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் 24 மாதத்துக்கு கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. பின்னர் 24 மாதம் முடிந்ததும் முதலீடு செய்த தொகை திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

போலீசில் புகார்

அத்துடன் 2-வது திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ.11 ஆயிரம் கொடுப்பதாகவும், 24 மாதத்துக்கு பின்னர் முதலீடு செய்த தொகையையும் திரும்ப கொடுப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதை நம்பி ஏராளமானோர் இந்த பண்ணையில் முதலீடு செய்தனர்.

ஆனால் முதலீடு செய்தவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்காமலும், முதலீடு செய்த பணத்தை திரும்ப கொடுக்காமலும் இருந்து உள்ளனர். இது குறித்து கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந் தேதி பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.

ரூ.10 கோடி மோசடி

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதில் அமுல் மொத்தம் 524 பேரிடம் இருந்து ரூ.10 கோடியே 3 லட்சத்து 66 ஆயிரத்து 690 மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அமுலை கைது செய்தனர்.

அத்துடன் இது தொடர்பாக கோவையில் உள்ள டான்பிட் (தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சங்கம்) கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் 2013-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் போலீஸ் தரப்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

10 ஆண்டு சிறை

இந்த வழக்கு சாட்சி விசாரணை முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட ஜோதிவேல் ஈமு மற்றும் நாட்டுக்கோழி பண்ணை உரிமையாளர் அமுல் என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 கோடியே 25 லட்சத்து 8 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி தீர்ப்பு கூறினார்.

மேலும் அபராத தொகையை அவர் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்