'சிறுமியின் விருப்பத்துடன் உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது' - வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விதித்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு

போக்சோ வழக்கில் வாலிபருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2024-05-12 20:13 GMT

கோப்புப்படம்

சென்னை,

சென்னையைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 25). கடந்த 2014-ம் ஆண்டு இவர், 15 வயது சிறுமியை திருத்தணி கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர், ஒகேனக்கல் சென்று அங்கு சில நாட்கள் தங்கி உள்ளார். இந்தநிலையில் சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இந்தநிலையில் சென்னை திரும்பிய அந்த சிறுமி போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இதன்பின்பு, பெற்றோருடன் அந்த சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்.

சதீஷ்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை போக்சோ கோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு சதீஷ்குமாருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து சதீஷ்குமார் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்னிலையில் நடந்தது.

அப்போது சதீஷ்குமார் தரப்பில் ஆஜரான வக்கீல், 'மனுதாரரும், சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் மனுதாரர் சிறுமியுடன் உறவு வைத்துள்ளார். எனவே, மனுதாரருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என வாதாடினார்.

இதை ஏற்க மறுத்த நீதிபதி, 'பாதிக்கப்பட்ட சிறுமி மைனர். அவர் விருப்பத்தின் பேரில்தான் மனுதாரர் உறவு கொண்டதாக கூறுவதை ஏற்க முடியாது. தற்போது அந்த சிறுமிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்துள்ளது.

மனுதாரர் சிறுமியிடம் நடந்து கொண்டது எப்போதும் அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். மனுதாரர் கடுமையான குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார். மனுதாரருக்கு 25 வயது ஆகிறது.

சிறுமியுடன் உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகளை அவர் அறியாமல் இருக்க முடியாது. எனவே, மனுதாரரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது' என தீர்ப்பு கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்