தரைப்பாலங்கள் மூழ்கியதால் 10 கிராமங்கள் துண்டிப்பு

குமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் 10 மலையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டன.;

Update: 2023-09-30 18:45 GMT

குலசேகரம்:

குமரி மாவட்டத்தில் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தரைப்பாலங்கள் மூழ்கின. இதனால் 10 மலையோர கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதுபோல் சிற்றார் அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ளது.

பலத்த மழை

குமரி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேல்கோதையாறு, கீழ்கோதையாறு, மயிலாறு, மோதிரமலை, வேலிப்பிலாம், கோலிஞ்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்கிறது. இதனால் பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரும் கோதையாறு, கும்பையாறு, கல்லாறு, குட்டியாறு, கிளவியாறு, சாத்தையாறு, மயிலாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மோதிரமலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மோதிரமலை-குற்றியாறு இடையே உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. அந்த வழியாக போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டது. இதுபோல் பல இடங்களில் தரை பாலங்கள் மூழ்கியதால் கோலிஞ்சிமடம், வேலிப்பிலாம் உள்பட 10 மலையோர கிராமங்கள், ரப்பர் கழக தொழிலாளர்களின் குடியிருப்புகள் போக்குவரத்து வசதியின்றி துண்டிக்கப்பட்டன.

இந்த கிராமங்களுக்கு செல்லும் மாற்றுப்பாதைகள் புதர் மண்டிக்கிடப்பதாகவும், யானைகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள். இதனால் இந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் போக்குவரத்து வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ள அபாய அளவு

மலையோர பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 1109 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவான 12 அடியை எட்டியுள்ளன. நேற்று காலை நிலவரப்படி சிற்றாறு 1 அணையின் நீர்மட்டம் 12.07 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீர்மட்டம் 12.17 அடியாகவும் இருந்தது.

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் கடந்த ஜூன் மாதம் பாசனத்திற்காக திறக்கப்பட்ட போதிலும் சிற்றாறு அணைகள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது இந்த அணைகளின் நீர்மட்டம் வெள்ள அபாய அளவை எட்டியுள்ள நிலையில் நேற்று காலை 10 மணிக்கு சிற்றாறு 1 அணையின் பாசன மதகு வழியாக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

திற்பரப்பு அருவி

மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொட்டுகிறது. நேற்று தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்த போதிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திற்பரப்புக்கு வந்தனர். அருவியில் அதிக அளவு வெள்ளம் கொட்டியதால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் மேலும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க முழுமையாக தடை விதிக்க வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்