மீன்சுருட்டி-கல்லத்தூர் சாலையை சீரமைக்கக்கோரி 10 கிராம மக்கள் மறியல்

பழுதடைந்த மீன்சுருட்டி-கல்லத்தூர் சாலையை சீரமைக்கக்கோரி 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2022-11-27 18:41 GMT

பழுதடைந்த சாலை

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் இருந்து கல்லாத்தூர் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ-மாணவிகள், விவசாயிகள், பொதுமக்கள் என பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் தரப்பில் பலமுறை மனுக்கள் அளித்தும், அமைதி வழி போராட்டம் நடத்தியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மற்றும் ஜனநாயக முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி 27-ந்தேதி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனிடையே அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

சாலை மறியல்

இதையடுத்து, மீன்சுருட்டி-கல்லத்தூர் சாலையை சீரமைக்கக்கோரி முற்போக்கு சிந்தனையாளர்கள் இயக்க மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மீன்சுருட்டி, குண்டவெளி, ஆலத்திபள்ளம், சலுப்பை, வெத்தியார்வெட்டு, கல்லாத்தூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரண்டு மீன்சுருட்டி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து வாகனங்களில் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்