ரூ.10 ஆயிரம் கோடி பட்டாசுகள் விற்பனை
இந்தியா முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடி பட்டாசுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.;
சிவகாசி,
சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள 1070-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு தேவையான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டன. இதில் பல்வேறு காரணங்களால் 4 மாதங்கள் வரை அதிகபட்சமாக பட்டாசு உற்பத்தி தடைப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டுக்கு தேவையான பட்டாசுகளில் சுமார் 60 சதவீதம் பட்டாசுகள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் லாரிகள் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டது. பட்டாசுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று உணர்ந்த சில வடமாநில பட்டாசு வியாபாரிகள் முன் கூட்டியே சிவகாசியில் உள்ள ஆலைகளில் பட்டாசுகளுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அதற்கான பணத்தையும் கொடுத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதனால் வடமாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முன்கூட்டியே அனுப்பி வைக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தேவையான பட்டாசுகள் முழுமையாக அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இருந்தபோதும் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட ரூ.10 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகள் இந்தியா முழுவதும் விற்பனை ஆனதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்ததை போலவே பட்டாசு விற்பனை அதிகமாக இருந்ததால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பட்டாசு உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும் பட்சத்தில் அடுத்த ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்புள்ள பட்டாசுகளை சிவகாசி பட்டாசு ஆலைகளால் உற்பத்தி செய்ய முடியும். அதற்கு தேவையான ஆலைகளும், பணியாளர்களும் சிவகாசியில் உள்ளனர் என்று பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.