வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு
பழைய நகைக்கு குறைந்த தொகை நிர்ணயம் செய்ததாக வழக்கில் வாடிக்கையாளருக்கு ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கவுண்டன்பட்டியைச் சேர்ந்த வக்கீல் சோலைராஜா. மதுரை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2016-ம் ஆண்டில் மதுரை யில் உள்ள ஒரு நகைக்கடையில் பழைய வெள்ளி நகைகளை கொடுத்து, புதிய நகைகளை வாங்கினேன்.
அன்றைய நிலவரப்படி பழைய வெள்ளி நகைக்கு ரூ.6601.28 கொடுத்திருக்க வேண்டும். ஆனால் ரூ.5505 மட்டும் கணக்கிடப்பட்டு இருந்தது. அதுமட்டுமல்லாமல் புதிய நகைக்காக ரூ.1,096.20 கூடுதலாக பெற்றனர். எனவே என்னிடம் கூடுதலாக பெற்ற பணத்தை திருப்பித் தர மறுத்து விட்டனர். அந்த தொகையை உரிய வட்டியுடன் செலுத்தும்படி நகைக்கடைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை நுகர்வோர் ஆணையத்தலைவர் பாரி, உறுப்பினர்கள் விமலா, வேலுமணி ஆகியோர் விசாரித்தனர். முடிவில், மனுதாரரின் குற்றச்சாட்டுகளை எதிர்தரப்பினர் நிரூபிக்கவில்லை. எனவே மனுதாரருக்கு சேர வேண்டிய ரூ.1096.20-ஐயும், அவருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தையும் 3 மாதத்தில் எதிர்தரப்பினர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.