உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் மோதல் 10 பேர் படுகாயம்
கடலூர் அருகே நர்சு குளித்ததை வீடியோ எடுத்த தகராறில் உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்
கடலூர்
செல்போனில் வீடியோ
கடலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 21 வயது நர்சு. இவர் புதுச்சேரியில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் மகன் அரவிந்த், தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த நர்சு, தனது தந்தையிடம் தெரிவித்தார். உடனே அவர், அரவிந்தை பிடித்து தட்டிக் கேட்டபோது அவர், சபாபதி, சதிஷ் ஆகியோர் கூறியதன் பேரில்தான் வீடியோ எடுத்ததாக கூறினார்.
மோதல்
உடனே நர்சின் தந்தை, அவர்களிடம் சென்று தட்டிக்கேட்ட போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஒருவரையொருவர் ஆபாசமாக திட்டி உருட்டுக்கட்டைகளுடன் மோதிக் கொண்டனர். இந்த தாக்குதலில் நர்சின் தந்தை, அவரது ஆதரவாளர்கள் சாத்தங்குப்பத்தை சேர்ந்த ராமமூர்த்தி (50), ஜெயசங்கர் (44), பழனிவேல் (45), ராஜேஷ், இந்திராணி (36) மற்றும் ஆறுமுகம் (50), நாராயணன் (42), தனபால் (48), தணிகாசலம் (45) ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
18 பேர் மீது வழக்கு
இதுகுறித்து இருதரப்பினரும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார் கொடுத்தனர். அதன் பேரில் இருதரப்பை சேர்ந்த நாராயணன், ஆறுமுகம், தனபால், முத்து, கோகுல், ராகுல் உள்ளிட்ட 18 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உருட்டுக்கட்டைகளுடன் இருதரப்பினர் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.