சாஸ்த்ரா பல்கலைக்கழக மாநாட்டில் 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம்

சாஸ்த்ரா பல்கலைக்கழக மாநாட்டில் 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம்;

Update: 2023-05-06 19:17 GMT

தஞ்சை அருகே சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் நடந்த பயோ நெஸ்ட் தொகுப்பு மாநாட்டில் 10 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டன.

2 நாள் மாநாடு

தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் (கிளஸ்டர்) 2 நாள் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. 2-வதுநாள் மாநாட்டை பைராக் பயோடெக் துறைக்கான தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் மேக் இன் இந்தியா வசதிப்பிரிவுத் தலைவர் மணீஷ்திவான் தொடங்கி வைத்தார்.

மேலும் பயோநெஸ்ட் தொகுப்பு தொழில் வளர்ப்பகங்களின் கிளின் கிரீன் டெக், மீளுருவாக்க மருத்துவம், நோயறிதல், மெட் டெக் சாதனங்கள், உணவு தர மதிப்பீடு, உதவி சாதனங்கள், மூலக்கூறு உயிரியல் கருவிகள் உள்ளிட்டவை தொடர்பாக 10 புதிய தயாரிப்புகளை அவர் வெளியிட்டு பேசினார்.

24 காப்புரிமைகள்

சாஸ்த்ராவின் அப்லெஸ்ட் தலைமை நிர்வாக அலுவலர் அனுராதா பேசுகையில், இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட தயாரிப்புகள் கோல்டன் ஜூப்ளி மகளிர் பூங்கா, வி.ஐ.டி., தானுவாஸ், சுகாதார தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையம், சென்னை ஐ.ஐ.டி., தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலைப்பல்கலைக்கழகம், பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரி, திருப்பதி எஸ்.பி.எம்.வி.வி. ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை என்றார்.

தமிழ்நாடு பயோநெஸ்ட் தொகுப்பின் தலைமை நிர்வாக அலுவலர் முத்து சிங்காரம் பேசுகையில், இத்தொகுப்பில் 417 தொழில் வளர்ப்பகங்கள் உள்ளன. இதில், 190 பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட் அப்களில் 107 ஸ்டார்ட் அப்கள் பெண்கள் தலைமையில் இயங்குகின்றன. இந்தத் தொகுப்புக்கு இதுவரை 24 காப்புரிமைகள் கிடைத்துள்ளன.என்றார்.

நவீன சாதனம் அறிமுகம்

இதில், உணவு சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்படும் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகளின் தரத்தைக் கண்காணிப்பதற்கான நவீன சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் மூலம் உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் வீணாவதை முன்கூட்டியே அறிந்து, தடுப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது. உணவு தானியங்களை கிடங்கில் எவ்வளவு காலம் வைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்ளும் விதமாக இந்த நவீன சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி அறிமுகம் செய்யப்பட்டது. நாம் பேசுவதன் மூலம் இயங்கக்கூடிய இந்த சக்கர நாற்காலியில் செல்பேசி மூலம் முன்னே செல்லுதல், பின்னோக்கி நகர்தல், இடது, வலது புறம் திரும்புதல் உள்ளிட்டவை தொடர்பாக நம்முடைய வாய்மொழியில் பதிவு செய்து, பயன்படுத்தும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய்

மின்னணு சாதனங்களை பேக்கிங் செய்யும்போது பயன்படுத்தப்படும் தெர்மோகோல் பொருள்களுக்கு பதிலாக விவசாயக் கழிவுகளான வைக்கோல், வெல்லப்பாகு, காளான் உள்ளிட்டவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்ட தக்கை அறிமுகம் செய்யப்பட்டது. தெர்மோகோலை விட மிகவும் பாதுகாப்பான இந்தத் தக்கை மறுசுழற்சி செய்யக்கூடியவை. சுற்றுச்சூழலையும் பாதிக்காத இந்தத் தக்கை மூலம் விவசாயிகளுக்குக் கூடுதல் வருவாயும் கிடைக்கும் விதமாக தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்பேசி மூலம் காற்று மாசுப்பாட்டை கண்டறிவதற்கான சாதனமும் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த விழாவில் சாஸ்த்ரா நிகர்நிலைப்பல்கலைக்கழக டீன் (திட்டம் மற்றும் மேம்பாடு) சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்