ரூ.10 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

மார்த்தாண்டத்தில் ரூ.10 லட்சம் போதைப்பொருளை பறிமுதல் செய்து, துணிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-02 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டத்தில் ரூ.10 லட்சம் போதைப்பொருளை பறிமுதல் செய்து, துணிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போதைப்பொருள் பறிமுதல்

மார்த்தாண்டம் பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்ய இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து மார்த்தாண்டம் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒருவர் குழித்துறை பகுதிக்கு போதைப்பொருளுடன் சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் நேற்று மதியம் குழித்துறை வாவுபலி திடல் பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்குள்ள வி.எல்.சி.மண்டபம் அருகே 2 பேர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் எம்.டி.எம்.ஏ.(மெத்தாம் பெட்டமின்) என்ற போதைப்பவுடர் 300 கிராம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

2 பேர் கைது

உடனே போலீசார் பிடிபட்ட 2 பேரையும் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் குமார் விசாரணை நடத்தினார்.

அப்போது ஒருவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த புத்தாராம் மகன் பிரகாஷ் (வயது 30) என்பதும், அவர் மார்த்தாண்டத்தில் துணிக்கடை நடத்தி வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் கிருஷ்ணலால் மகன் ராஜேஷ் (27) என்றும், அவர் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்தது.

விற்க முயன்ற போது...

அதாவது கேரள மாநிலம் பாறசாலை பகுதியை சேர்ந்தவர் கணேஷ் என்பவர் குட்கா கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் விலை உயர்ந்த போதை பொருள் பெற்று தருமாறு பிரகாஷிடம் கேட்டுள்ளார். அதைத்தொடர்ந்து பிரகாஷ், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஒருவரிடம் பேசினார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து 300 கிராம் போதை பொருளை பெங்களூருவை சேர்ந்த ராஜேஷிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அவர் அந்த போதைப்பொருளுடன் மார்த்தாண்டம் வந்துள்ளார்.

உடனே கணேஷிடம் போதை பொருள் வந்து விட்டதாக பிரகாஷ் கூறியுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் வாவுபலி திடல் அருகே வந்து போதை பொருளை வாங்கி கொள்வதாக கூறினார். அதன்படி பிரகாஷ், ராஜேஷ் ஆகியோர் வி.எல்.சி. மண்டபம் அருகே கணேஷிடம் போதை பொருளை விற்க சென்றனர். அப்போது பிரகாஷ், ராஜே ஷ் ஆகிய இருவரும் போலீசாரிடம் சிக்கினர். அதே சமயம் அங்கு வந்த கணேஷ் போலீசாரிடம் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்.

இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்