மேச்சேரியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட 10 வீடுகள், கடைகள் இடிப்பு-தாய்- மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
மேச்சேரியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட 10 வீடுகள், கடைகள் இடித்து அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்- மகன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேச்சேரி:
ஆக்கிரமிப்பு அகற்றம்
சேலம் மாவட்டம் மேச்சேரியில் சேலம் மெயின் ரோட்டில் சந்தைப்பேட்டை அருகில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலம் 53 சென்ட் உள்ளது. இதில் சிலர் வீடுகள் மற்றும் கடைகள் அமைத்து குடியிருந்து வந்தனர். இதுகுறித்து மேச்சேரி அருகே கோனூர் ஆண்டிக்கரையைச் சேர்ந்த சின்னுசாமி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் ஆக்கிரமிப்பை அகற்ற ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து சந்தைப்பேட்டை பகுதியில் 10 வீடுகள், 3 கடைகள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன. இதையொட்டி அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீக்குளிக்க முயற்சி
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செல்வம், அவருடைய தாயார் சரோஜா ஆகியோர் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவர்களிடம் இருந்து மண்எண்ணெய் கேனை பிடுங்கினர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். அப்போது அவர்கள், எங்களுக்கு மாற்று இடம் வேண்டும் என்று கூறினர்.
தொடர்ந்து வீடுகள், கடைகளை இழந்தவர்களிடம் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு கென்னடி, மேட்டூர் தாசில்தார் முத்துராஜா, துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், மேச்சேரி இன்ஸ்பெக்டர் சண்முகம், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்களது கோரிக்கை குறித்து அரசுக்கு தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் காலையில் இருந்து மாலை வரை பரபரப்பு ஏற்பட்டது.