சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
விழுப்புரம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 1½ டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
விழுப்புரம் அருகே ஆயந்தூரில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி அருகில் நேற்று முன்தினம் இரவு காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் சந்தேகத்தின்பேரில் வழிமறித்தனர். போலீசாரை பார்த்ததும் சரக்கு வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே இறங்கி தப்பி ஓடிவிட்டார். பின்னர் அந்த வாகனத்தை போலீசார் சோதனை செய்ததில் அந்த வாகனத்தினுள் 50 கிலோ எடை கொண்ட 30 சாக்கு மூட்டைகளில் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆயந்தூர் பகுதி பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி திருக்கோவிலூர் பகுதியில் வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக கடத்த முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சரக்கு வாகன டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.