1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி; அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேட்டி

தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி வருகையின்போது 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

Update: 2022-12-02 18:45 GMT

தென்காசிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 8-ந் தேதி வருகையின்போது 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

தென்காசிக்கு முதல்-அமைச்சர் வருகை

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8-ந் தேதி தென்காசிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தென்காசி வருகிறார். இதற்காக தென்காசி அருகே உள்ள கணக்கப்பிள்ளை வலசை வேல்ஸ் வித்யாலயா பள்ளி மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மொத்தம் 1.92 லட்சம் சதுர அடியில் இந்த பணி நடைபெறுகிறது.

இதனை நேற்று மாலை வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனைகள் நடத்தினார். அவருடன் மாவட்ட கலெக்டர் ஆகாஷ், போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவ பத்மநாதன், ராஜா எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.

1 லட்சம் பயனாளிகள் தேர்வு

பின்னர் நிருபர்களுக்கு அமைச்சர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற 8-ந் தேதி தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், புதிய திட்டங்களை அறிவிக்கவும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகிறார். சென்னையில் இருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ெரயிலில் காலை 7.30 மணிக்கு தென்காசி ெரயில் நிலையத்தில் வந்து இறங்கும் முதல்-அமைச்சர் குற்றாலம் அரசு விருந்தினர் மாளிகையில் சற்று நேரம் ஓய்வு எடுத்துவிட்டு விழா நடைபெறும் இடத்திற்கு வருகிறார். மாவட்ட நிர்வாகம் சார்பில் 1 லட்சம் பயனாளிகளை தேர்வு செய்து பரவலாக எல்லா பகுதிகளுக்கும் நலத்திட்டங்கள் சேரும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழிநெடுக வரவேற்பு

இந்த விழாவிற்கு பிறகு முதல்-அமைச்சர் ராஜபாளையம் செல்கிறார். ெரயில் நிலையம் முதல் சுற்றுலா மாளிகை வரையிலும், சுற்றுலா மாளிகையில் இருந்து விழா நடைபெறும் இடம் மற்றும் விழா நடைபெறும் இடத்தில் இருந்து ராஜபாளையம் வரையிலும் சுமார் 80 ஆயிரம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு முதல்வருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளை 700 பேர் ஆங்காங்கே நடத்துகிறார்கள். முதல்வர் தென்காசி மாவட்டத்திற்கு முதல் முறையாக வருவதால் தென்காசி நகரமே அன்று விழாக்கோலம் பூண்டிருக்கும். பயனாளிகள் விவரம் குறித்து நாளை காலை (அதாவது இன்று) 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், சீனித்துரை, தென்காசி பஞ்சாயத்து யூனியன் தலைவர் ஷேக் அப்துல்லா, மாவட்ட பொருளாளர் ஷெரீப், அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேல், முன்னாள் கூட்டுறவு பண்டக சாலை தலைவர் ஷமீம் இப்ராகிம், செங்கோட்டை நகர செயலாளர் வெங்கடேசன், முன்னாள் செயலாளர் ரஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்