கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள்

விடாமுயற்சியுடன் படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை உணர்ந்து கொண்டதாக கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறினர்.;

Update: 2022-11-15 20:14 GMT


விடாமுயற்சியுடன் படித்தால் உயர்ந்த நிலையை அடையலாம் என்பதை உணர்ந்து கொண்டதாக கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் கூறினர்.

கலெக்டருடன் ஒரு நாள்

விருதுநகர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளின் தன்னம்பிக்கையை வளர்க்கும் வகையில் கலெக்டருடன் ஒரு நாள் நிகழ்ச்சி முதன்முறையாக நடைமுறைக்கு வந்தது.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் மேகநாதரெட்டியுடன் வன்னியம்பட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர் சிவசக்தி பாலன், காரியாபட்டி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவி செம்பருத்தி, கோட்டையூர் ஆதிதிராவிடர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நதியா, மல்லி புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் கர்ணன், சூலக்கரை அன்னை சத்யா இல்லத்தில் தங்கி படிக்கும் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி விவேகா ஆகியோர் பங்கேற்றனர்.

கலந்துரையாடல்

கலெக்டர் அலுவலகம் வந்த மாணவர்கள், கலெக்டருடன் கலந்துரையாடினர். பின்னர் கலெக்டர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர். அதிலும் குறிப்பாக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கும் போது அங்கு அமர்ந்து நடைமுறைகளை கவனித்தனர்.

இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளுக்கு சென்று அங்கு நடக்கும் பணிகளை பார்வையிட்டு கேட்டறிந்தனர். இதையடுத்து கலெக்டருடன் காரில் சென்று வாசிப்பு இயக்கம் மற்றும் இன்றைய குழந்தை, நாளைய முதல்வன் திட்டத்தையும் பள்ளிகளில் மாணவ-மாணவிகள், தலைமை ஆசிரியராகவும், ஆசிரியராகவும் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதையும் பார்வையிட்டனர்.

மக்களுக்கு சேவை

இதனை தொடர்ந்து மதியம் கலெக்டருடன் உணவருந்தினர். இதுகுறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், விடாமுயற்சியுடன் கடினமாக உழைத்து படித்தால் உயர் நிலையை அடையலாம் என்பதை கலெக்டர் மேகநாதரெட்டி செயல்பாடுகளின் மூலம் உணர்ந்தோம். மேலும் அவரது செயல்பாடுகளை பார்வையிட்டது மறக்க முடியாத அனுபவம் ஆகும்.

மேலும் நாங்களும் எதிர்காலத்தில் கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்ற உறுதி எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றனர்.

கலெக்டர் மேகநாதரெட்டி கூறுகையில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அவர்களது லட்சியத்தை அடையவும் ஊக்குவிக்கவும் இந்த நிகழ்ச்சி ஒரு முயற்சியாக அமையும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்