இந்தோனேசியா சிறையில் பலியான மீனவரின் இறப்புக்கு நீதிகேட்டு சர்வதேச கோர்ட்டை மத்திய அரசு நாட வேண்டும்

The Central Government should approach the International Court of Justice for the death of the fisherman;

Update: 2022-11-15 18:15 GMT

நாகர்கோவில், 

இந்தோனேசியா சிறையில் மர்மமான முறையில் இறந்த மீனவரின் சாவுக்கு நீதிகேட்டு மத்திய அரசு சர்வதேச ேகார்ட்டை நாட வேண்டும் எனக்கோரி அவருடைய குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

கலெக்டர் அலுவலகத்தில் மனு

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் அருட்பணியாளர் சர்ச்சில் தலைமையில், இந்தோனேசியாவில் சிறையில் மர்மமான முறையில் இறந்த குமரி மீனவர் மரிய ஜெசின்தாஸ்சின் குடும்பத்தினர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

சிறைபிடிப்பு

குமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த மீனவர் மரிய ஜெசின்தாஸ் உள்பட 8 மீனவர்கள் அந்தமான் தீவில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். இவர்கள் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது கடல் எல்லையை தாண்டியதாக இந்தோனேசியா வான் மற்றும் கடல் போலீஸ் அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்களில் 4 பேர் விடுவிக்கப்பட்டனர். மரிய ஜெசின்தாஸ் உள்பட 4 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் மீனவர் மரிய ஜெசின்தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார் என்று அவரது குடும்பத்தினருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மீனவர் இறந்ததற்கான உண்மையான காரணத்தை கூறாமல், இறப்புக்கான வழக்குப்பதிவு செய்யாமலும், அவரது உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யாமலும் அவசர அவசரமாக இந்தோனேசியா அரசு அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது.

பிரேத பரிசோதனை

மரிய ஜெஸ்ஸின்தாசின் இறப்பில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் உடலை பிரேத பரிசோதனை செய்ய கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் மீனவர் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

பிரேத பரிசோதனை செய்யப்பட்டு 6 மாதங்களுக்குப் பின்பு வெளியான ரசாயன பரிசோதனை அறிக்கையில் மீனவர் மரிய ஜெசின்தாஸ் உடல் நலக்குறைவால் இறக்கவில்லை என்றும் அவரது உடலில் காயங்கள் அதிகமாக உள்ளதால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி நிவாரணம்

எனவே மரிய ஜெசின்தாசை சிறையில் அடித்து கொலை செய்த காரணத்திற்காக இந்தோனேசியா அரசின் மீது மத்திய அரசு வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மரிய ஜெசின்தாசின் இறப்புக்கு நீதி கேட்டு, சர்வதேச ேகார்ட்டை மத்திய அரசு நாட வேண்டும். அவரது குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்

கடந்த 9 மாதங்களாக இந்தோனேசியா சிறையில் வாடும் பூத்துறையை சேர்ந்த இம்மானுவேல் ஜோஸ், கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தை சேர்ந்த சிஜின், ஜோய்மோன் ஆகியோரை உடனே மீட்டு தாயகம் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி குமரி மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராதா கிருஷ்ணன் தலைமையில் மீனவர் குடும்பத்தினர் ேபாலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்