நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகள் கொட்டினால் கடும் நடவடிக்கை; வியாபாரிகளுக்கு எச்சரிக்கை
warning;
அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கடவூர் பிரிவு அருகே ரெங்கப்பநாயக்கன்குளம் உள்ளது. இந்த குளத்தில் கடந்த 13-ந்தேதி சிலர் இறைச்சி கழிவுகளை கொட்டினர். இதனை பார்த்த பொதுமக்கள், அந்த நபர்களை வாகனத்துடன் சிறைபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இறைச்சி கழிவுகளை கொட்டிய நபர்களை விடுவித்தனர்.
இந்தநிலையில் அய்யலூர் பேரூராட்சி அலுவலகத்தில் இன்று இறைச்சி வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி தலைவர் கருப்பன், செயல் அலுவலர் பாண்டீஸ்வரி ஆகியோர் தலைமை தாங்கினர். அப்போது, அய்யலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட இறைச்சி கடைகளில் கழிவுகளை தரம் பிரித்து வைக்க வேண்டும்.
அவற்றை பேரூராட்சி பணியாளர்கள் சேகரித்து அப்புறப்படுத்துவார்கள். நீர்நிலைகளில் இறைச்சி கழிவுகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இறைச்சி வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.