ரெயில் பாதையில் மண் சரிவு

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப் பட்டது.

Update: 2022-11-15 18:45 GMT

குன்னூர், 

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரெயில் நடுவழியில் நிறுத்தப் பட்டது.

மண் சரிவு

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தடுப்புச்சுவர்கள், வீடுகள் இடிந்து விழுந்தன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் குன்னூர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் ரெயில் பாதையில் ஹில்குரோவ்-ஆடர்லி ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

தண்டவாளத்தில் செடிகளுடன் மண் விழுந்து கிடந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு குன்னூரை நோக்கி மலை ரெயில் வந்து கொண்டிருந்தது. ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டது குறித்து ஆடர்லி ரெயில் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து மலை ரெயில் ஆடர்லி அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தில் விழுந்த மண்ணை அகற்றி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மலை ரெயில் தாமதம்

இதனால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மலை ரெயில் அங்கிருந்து குன்னூரை நோக்கி புறப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்தனர். வழக்கமாக குன்னூரை காலை 10.30 மணிக்கு வந்தடையும். மண் சரிவு காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக மலை ரெயில் குன்னூருக்கு வந்தது. பின்னர் அங்கிருந்து ஊட்டிக்கு சென்றது.

குன்னூர் அருகே எல்லநள்ளி-பாலாடா சாலையில் கேத்தி பகுதியில் ராட்சத மரம் சாலையின் குறுக்கே முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். முதலில் சாலையில் கிடந்த மரம் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்த பட்டது. பின்னர் தீயணைப்பு வீரர்கள், நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் 2 மணி நேரத்துக்கு பின்னர் போக்குவரத்து சீரானது. 

Tags:    

மேலும் செய்திகள்