சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை..!!

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.;

Update: 2023-08-17 17:53 GMT

சென்னை,

வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதாவது, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய மழை வெளுத்து வாங்கியது. இதன்படி நுங்கம்பாக்கம், அண்ணாநகர், ராயப்பேட்டை, மெரினா பகுதிகளிலும், சைதாப்பேட்டை, கோடம்பாக்கம், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும், கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.

நகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடையே வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது படிப்படியாக மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்