தமிழக அரசவை கவிஞராக இருந்தவர் கண்ணதாசன்

சிறுவயதில் சிகப்பு ஆச்சி என்பவர் ரூ.7 ஆயிரத்துக்கு தத்து எடுத்து கொண்டார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார்.

Update: 2021-06-21 01:40 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல்பட்டி என்ற ஊரில் சாத்தப்பன்-விசாலாட்சி தம்பதியினருக்கு 1924-ம் ஆண்டு ஜூன் மாதம் 24-ந்தேதி கண்ணதாசன் மகனாக பிறந்தார். இவர் இயற்பெயர் முத்தையா. இவரை சிறுவயதில் சிகப்பு ஆச்சி என்பவர் ரூ.7 ஆயிரத்துக்கு தத்து எடுத்து கொண்டார். அவருடைய வீட்டில் நாராயணன் என்ற பெயரில் வாழ்ந்து வந்தார். ஆரம்ப கல்வியை சிறுகூடல்பட்டியிலும், அமராவதிபுதூர் உயர்நிலைப்பள்ளியிலும் 8-ம் வகுப்பு வரை படித்தார். இவர் இளம் வயதிலே கவிதை படிக்கும் ஆற்றல் படைத்தவராக திகழ்ந்தார். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக பணியாற்றினார். அப்போது அவர் கண்ணதாசன் என்ற புனைபெயரை வைத்துக்கொண்டார்.

கண்ணதாசன் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமாக திகழ்ந்தார். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சினிமா பாடல்கள், புதினங்கள், கட்டுரைகள் பலவற்றை எழுதியுள்ளார். சிறுகதைகள் என பல்வேறு படைப்புகளை படைத்துள்ளார். மேலும் இயேசு காவியம், அர்த்தமுள்ள இந்து மதம் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார். 1980-ம் ஆண்டு சேரமான் காதலி என்ற புதினத்திற்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. தமிழக அரசின் அரசவைக் கவிஞராக நியமிக்கப்பட்டார். அவரை ‘கவிப்பேரரசு’ என்று அழைத்தனர்.

கண்ணதாசனுக்கும், பொன்னழகி என்ற பொன்னம்மாள் என்பவருக்கும் 1950-ம் ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி காரைக்குடியில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். பார்வதி என்பவரை 1951-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 5 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அவர் தனது 50-வது வயதில் புலவர் வள்ளியம்மை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விசாலி என்னும் மகள் ஒருவர் உள்ளார். கம்பரின் செய்யுளிலும், பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இவர் பாரதியாரை மானசீகக் குருவாக ஏற்றுக்கொண்டார்.

கண்ணதாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவில் சிகாகோ நகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 1981-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி கண்ணதாசன் மறைந்தார். அவருடைய உடல் அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அவருடைய உடலுக்கு ஏராளமான மக்கள் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.

கவிஞர் கண்ணதாசன் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய பஸ்நிலையம் அருகில் தமிழக அரசு ரூ.84 லட்சம் செலவில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இந்த மணிமண்டபத்தில் கவியரசு கண்ணதாசனின் மார்பளவு சிலை வைக்கப்பட்டுள்ளது. மேல்தளத்தில் அரங்கமும், கீழ்தளத்தில் 2,400 புத்தகங்களுடன் ஒரு நூலகமும் இயங்கி வருகின்றது. இங்கு கவியரசு கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் மறைந்தாலும் அவர் எழுதிய திரைப்பட பாடல்கள் இன்றும் நம் காதில் ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது. அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்த பாடல்களை அவர் இயற்றியுள்ளார்.

மேலும் செய்திகள்