சிறுமியை கற்பழித்த தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் - குற்றத்தை மறைத்த தாய்க்கும் தண்டனை
சிறுமியை கற்பழித்த தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. குற்றத்தை போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்த தாய்க்கும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.;
மும்பை,
சிறுமியை கற்பழித்த தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து மும்பை கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு அளித்தது. குற்றத்தை போலீசுக்கு தெரிவிக்காமல் மறைத்த தாய்க்கும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.
சிறுமி கற்பழிப்பு
மும்பையை சேர்ந்த சிறுமி ஒருவள் தனது வீட்டில் தாயுடன் இரவில் படுத்து தூங்கினார். அந்த நேரத்தில் சிறுமியை அவளது தந்தை கற்பழிக்க முயன்றார். திடுக்கிட்ட சிறுமி சத்தம் போட முயன்றார். அவளின் வாயை பொத்தி சிறுமி சத்தம் போடுவதை தடுத்தார். அப்போது தாயும் எழுந்து விட்டார். நடந்த சம்பவம் பற்றி தாய் அறிந்தும் போலீசில் புகார் அளிக்கவில்லை. பெற்ற மகளை கற்பழிக்க முயன்ற இந்த சம்பவம் கடந்த 2018-ம் ஆண்டு நடந்தது. தந்தையின் செயலை பற்றி தாய் கண்டுகொள்ளாததால் மறுநாள் அந்த சிறுமி பக்கத்து வீட்டை சேர்ந்தவரிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி கூறினாள். சிறுமியின் குடும்பத்தினர் பீகாரை சேர்ந்தவர்கள். மும்பைக்கு வரும் முன் அவர்கள் பீகாரில் இருந்த போது சிறுமியை அவளது தந்தை கற்பழித்த கொடூரத்தையும் பக்கத்து வீட்டாரிடம் கூறி கதறினாள்.
தந்தைக்கு 20 ஆண்டு ஜெயில்
இந்த சம்பவம் குறித்து கஸ்தூர்பா மார்க் போலீசார் சிறுமியின் தந்தை மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் போலீசுக்கு தெரிவிக்காமல் குற்றத்தை மறைத்த தாய் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு மும்பை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி ஸ்ரீகாந்த் போசலே விசாரித்து வந்தார். விசாரணை நிறைவில், சிறுமியின் தந்தை மீதான குற்றம் நிரூபணம் ஆனது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
தாய்க்கும் தண்டனை
மேலும் குற்றத்தை மறைத்த காரணத்திற்காக சிறுமியின் தாய்க்கு 6 மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். சிறுமியின் தாய்க்கு விதித்த தண்டனை பற்றி நீதிபதி தனது தீர்ப்பில், "குற்ற சம்பவம் பற்றி தெரிந்திருந்தும் சிறுமியின் தாய் போலீசை அணுகவில்லை. குறிப்பிட்ட காலத்தில் ஒருவர் பயத்தில் இருந்து இருக்கலாம். ஆனால் நீண்ட காலமாக தொடர்ந்து பயத்தில் இருப்பதாக கூற முடியாது" என்று குறிப்பிட்டார்.