மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா சார்பில் 3 பேர் வேட்பு மனு
மராட்டிய மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா சார்பில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா சார்பில் 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அனைவரும் வெற்றி பெறுவார்கள் என தேவேந்திர பட்னாவிஸ் பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தேர்தல் பலம்
மராட்டியத்தை சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகாலம் விரைவில் முடிவடைகிறது. இந்தநிலையில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
தற்போது மராட்டியத்தில் உள்ள சட்டசபை உறுப்பினர் பலத்தை பொறுத்து பா.ஜனதா 2 இடங்களையும், சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தலா ஒரு இடத்தையும் எளிமையாக கைப்பற்ற முடியும்.
மீதமுள்ள ஒரு இடத்தை ஆளும் கூட்டணில் உள்ள 3 கட்சிகளும் இணைந்தால் கைப்பற்ற முடியும் என்ன நம்பப்படுகிறது.
குதிரை பேரம்
இதன் காரணமாக சிவசேனா சார்பில் சஞ்சய் ராவத் மற்றும் சஞ்சய் பவார் ஆகியோர் களம் இறக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் பா.ஜனதா கட்சி தனது பலத்தை மீறி 3 வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி மத்திய மந்திரி பியூஷ் கோயல், கட்சியின் மூத்த தலைவர் அனில் பாண்டே மற்றும் தனஞ்செய் மகாதிக் ஆகியோர் நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் 3 பேரும் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதனால் 6-வது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டி ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் மாநிலங்களவை தேர்தலில் பா.ஜனதா கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து முன்னாள் முதல்- மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியதாவது:-
வெற்றி பெறுவார்கள்...
எங்கள் கட்சியின் 3 வேட்பாளர்களும், அவர்களின் (ஆளும் கட்சியினர்) 3 வேட்பாளர்களும் களத்தில் இருந்தால் குதிரை பேரம் என்ற பேச்சுக்கே இடம் இருந்திருக்காது. இதுகுறித்து அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.
ஆனால் அவர்கள் தற்போது 4-வது இடத்தில் போட்டியிட்டாலும். நாங்கள் எந்த குதிரை பேரத்திலும் ஈடுபட மாட்டோம். எங்கள் கட்சியின் 3 வேட்பாளர்களும் வெற்றி பெறுவார்கள்.
எங்கள் வேட்பாளர்கள் அனைவரும் மராட்டியத்தை சேர்ந்தவர்கள். அனைவரும் அரசியலில் தீவிரமாக உள்ளவர்கள். எனவே சிலர் தங்களின் நல்லுணர்வை வெளிப்படுத்த எங்கள் வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
3 வேட்பாளருக்கான வேட்பு மனுவை தாக்கல் செய்தது நாங்கள் நன்கு யோசித்து எடுக்கப்பட்ட முடிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபுல் படேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த இம்ரான் பிரதாப் காரியும் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ளனர்.