நவிமும்பையில் வீட்டு சுவரில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு
நவிமும்பை பன்வெல் பகுதியில் ஒரு வீட்டின் சுவரில் தடைசெய்யப்பட்ட அமைப்பின் ஸ்டிக்கரை மர்மநபர்கள் ஒட்டிச்சென்றதால் பரபரப்பு;
மும்பை,
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்புக்கு இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் நியு பன்வெல் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் உள்ள சுவரில் 'பி.எப்.ஐ. ஜிந்தாபாத்', '786' என்ற வாசகம் அடங்கிய பச்சை நிற ஸ்டிக்கரை ஒட்டி சென்றனர். மேலும் அவர்கள் அருகில் உள்ள 2 வீடுகளில் அணுகுண்டு பட்டாசையும் கட்டி தொங்கவிட்டு சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்து கண்டேஷ்வர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் சம்பவம் குறித்து இருபிரிவினர் இடையே மோதலை தூண்டிவிடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் மர்ம நபர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் முன் தடை செய்யப்பட்ட அமைப்பின் ஸ்டிக்கரை மர்ம நபர்கள் ஒட்டி சென்ற சம்பவம் பன்வெலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.