மும்பை - நாக்பூர் இடையேயான சம்ருத்தி நெடுஞ்சாலை பணிகள் 80 சதவீதம் நிறைவு

மும்பை நாக்பூர் இடையேயான சம்ருத்தி நெடுஞ்சாலை பணிகள் 80 சதவீதம் முடிந்து உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.;

Update:2023-03-10 00:15 IST

மும்பை, 

மும்பை நாக்பூர் இடையேயான சம்ருத்தி நெடுஞ்சாலை பணிகள் 80 சதவீதம் முடிந்து உள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

80 சதவீதம் முடிந்தது

மராட்டிய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

மும்பை - நாக்பூர் பால்தாக்கரே சம்ருத்தி நெஞ்சாலை பணிகள் 80 சதவீதம் முடிந்துள்ளது. முதல் கட்ட பணிகள் முடிந்து கடந்த மாதம் நாக்பூர் - ஷீரடி இடையேயான சாம்ருத்தி சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 10 லட்சத்துக்கும் அதிகமான வாகனங்கள் அந்த சாலையை பயன்படுத்தி உள்ளன.

தற்போது சாம்ருத்தி நெடுஞ்சாலை சிந்த்கேட்ராஜா நோட் பகுதியில் இருந்து சென்காவ் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாக்பூர் - கோவா விரைவு சாலை

நாக்பூர் - கோவா இடையே விரைவு சாலை அமைப்பதற்கான தொழில்நுட்ப, பொருளாதார சாத்தியக்கூறு தொடர்பான அறிக்கை தயாராகி வருகிறது. இந்த திட்டத்துக்கு ரூ.86 ஆயிரத்து 300 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புனே நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.27 ஆயிரம் கோடி மதிப்பிலான உள் வட்டச்சாலை (ரிங்-ரோடு) திட்டப்பணிகள் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு திட்டத்துக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு நிலம் கையகப்படுத்த தேவையான நிதி ஒதுக்கப்படும்.

அடுத்த நிதியாண்டில் (2023-24) 4 ஆயிரத்து 500 கி.மீ. தூரத்துக்கு மாவட்ட, கிராமப்புற சாலைகள் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் மேம்படுத்தப்படும். மாநில பொதுப்பணித்துறை இந்த பணிகளை மேற்கொள்ள உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்