தோழியிடம் பேசிய சக மாணவருக்கு கத்திக்குத்து; பிளஸ் 2 மாணவன் வெறிச்செயல்
தெலுங்கானாவில் தன் தோழியிடம் பேசிய ஆத்திரத்தில் தோழியுடன் படித்த மாணவரை பிளஸ் 2 மாணவன் கத்தியால் குத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.;
ஐதராபாத்,
தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் ராஜேந்திர நகர் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருபவர் துர்க பிரசாத். இவர் தன்னுடன் படித்து வரும் மாணவி ஒருவரிடம் எப்போதும் போல் பேசி வந்துள்ளார்.
இந்த நிலையில், அந்த மாணவியின் மற்றொரு தோழனான 12ம் வகுப்பு மாணவன் ஒருவன் இதனை கவனித்து ஆத்திரமடைந்து உள்ளான்.
தனது தோழியிடம் சக மாணவன் பேசி வந்தது பிளஸ் 2 படித்து வந்த மாணவனுக்கு பிடிக்கவில்லை. இதனால், அந்த மாணவனை ராஜேந்திரநகர் பகுதிக்கு தனியாக அழைத்து சென்ற பிளஸ் 2 படித்து வந்த மாணவன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளான்.
இதில் பலத்த காயமடைந்த அந்த மாணவனை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இதுபற்றி பஞ்சாரா ஹில்ஸ் பகுதியின் காவல் ஆய்வாளர் நாகேஷ்வர் ராவ் தலைமையிலான போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தோழியிடம் சக மாணவர் பேசியது பிடிக்காமல் பிளஸ் 2 படித்து வந்த மாணவன் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.