சோனியா குறித்த கருத்துக்காக யத்னால் எம்.எல்.ஏ.வை நீக்க வேண்டும்

சோனியா காந்தி குறித்து தரக்குறைவாக கருத்து தெரிவித்துள்ள பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ.வை நீக்க வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2023-04-28 22:38 GMT

பெங்களூரு:-

பிரதமராகும் வாய்ப்பு

பெங்களூரு காங்கிரஸ் அலுவலகத்தில் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சோனியா காந்திக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த பதவியை அவர் தியாகம் செய்தார். நாங்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பணியாற்றினார். நான் டெல்லி திகார் சிறையில் இருந்தபோது, என்னை நேரில் வந்து சந்தித்து பேசி ஆதரவு தெரிவித்து சென்றார். அவரை பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ., விஷ கன்னி என்று மிகவும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார்.

பெண்களை அவமதிப்பது...

இந்த விமா்சனத்தை நாங்கள் சகித்துக்கொள்ள மாட்டோம். அவர் கூறிய கருத்துக்காக பிரதமர் மோடியும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் மன்னிப்பு கேட்க வேண்டும். இது சோனியா காந்திக்கு மட்டும் ஏற்பட்ட அவமானம் இல்லை, ஒட்டுமொத்த பெண்களுக்கு ஏற்பட்ட அவமானம். ஜே.பி.நட்டாவுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

பெண்களை அவமதிப்பது பா.ஜனதாவின் பழக்கம். அவர்கள் நேரு குடும்பத்தினரை விமர்சிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பிரதமர் மோடி சோனியா காந்தியை ஜெர்சி பசு என்று அழைத்தார். இது தான் பிரதமர் மோடியின் கலாசாரமா?. சோனியா காந்தியை காங்கிரசின் விதவை என்று கூறினர். எங்களின் தாயார், உங்களின் தாயார் விதவை அல்லவா?.

மன்னிப்பு கேட்க வேண்டும்

நாட்டில் மாற்றம் கர்நாடகத்தில் இருந்து தொடங்க உள்ளது. கர்நாடகம் இந்திரா காந்திக்கு மறுஜென்மம் கொடுத்தது. சோனியா காந்திக்கு பலம் கொடுத்தது. காங்கிரஸ் தொண்டர்கள் வெகுண்டு எழுவதற்கு முன்பு பிரதமர் மோடி, பசவராஜ் பொம்மை மன்னிப்பு கேட்க வேண்டும். 50 லட்சம் தொண்டர்களுடன் பிரதமர் மோடி காணொலியில் கலந்துரையாடினார். இதற்கு பா.ஜனதாவினர் அனுமதி பெற்றனரா?.

பிரதமர் மோடி குறித்து மல்லிகார்ஜூன கார்கே கூறிய கருத்துக்காக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சியினர் ரகசிய கூட்டணி அமைத்துள்ளதாக அந்த கட்சிகளின் தலைவர்களே கூறியுள்ளனர். அதனால் இதுபற்றி நான் ஒன்றும் கூற மாட்டேன். நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா இன்று (நேற்று) எனது முன்னிலையில் காங்கிரசில் சேர்ந்துள்ளார்.

நல்ல நண்பர்கள்

நடிகர்கள் சுதீப், தர்ஷன் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு எனக்கு நல்ல நண்பர்கள். கீதா சிவராஜ்குமார் எங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார். ராகுல் காந்தி அறிவித்துள்ள திட்டங்களால் ஈர்க்கப்பட்டு அவர் எங்கள் கட்சிக்கு வந்துள்ளார்.

ராகுல் காந்தியின் உத்தரவின்பேரில் நான் மங்களூருவில் இருந்து இங்கு வந்து கீதா சிவராஜ்குமாரை கட்சியில் சோ்த்துள்ளேன். மூடிகெரேயை சேர்ந்த ஜனதா தளம் (எஸ்) கட்சியின் முன்னாள் மந்திரி பி.பி.நிங்கையா காங்கிரசில் சேர்ந்துள்ளார்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்