ஓய்வின்றி செயல்படுகிறார்; இந்த தருணத்தில் ரெயில்வே மந்திரியை பதவி விலக கோருவது சரியல்ல: எச்.டி. தேவகவுடா பேட்டி

ரெயில்வே மந்திரி ஓய்வின்றி செயல்படும் இந்த தருணத்தில், அவரை பதவி விலக கோருவது சரியல்ல என்று முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகவுடா பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2023-06-06 08:10 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான எச்.டி. தேவகவுடா செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

அப்போது அவர் அளித்த பேட்டியில், ஒடிசாவில் ரெயில் விபத்து பாதிப்பை அடுத்து அனைத்து தேவையான மீட்பு நடவடிக்கைகளையும் மத்திய ரெயில்வே மந்திரி அஷ்வினி வைஷ்ணவ் எடுத்து உள்ளார்.

அவர் ஓய்வின்றி பணியாற்றி வருகிறார். விபத்துபற்றிய விசாரணை நடத்தி முடிக்கப்படட்டும். ரெயில்வே மந்திரி முடிந்த வரை சிறப்பாக செய்து வருகிறார்.

அதனால், இந்த தருணத்தில் ரெயில்வே மந்திரியை பதவி விலகும்படி கோருவது புத்திசாலித்தனமல்ல என்று கூறியுள்ளார். 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து அவர் பேசும்போது, நாங்கள் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. இவை எல்லாவற்றையும் விட, முதலில் உள்ளாட்சி தேர்தலுக்கு எங்களுடைய கட்சியை பலப்படுத்த வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்