கொள்ளேகாலில் தேனீக்கள் கொட்டியதில் தொழிலாளி சாவு

கொள்ளேகாலில் தேனீக்கள் கொட்டியதில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2023-09-19 18:45 GMT

கொள்ளேகால்-

கொள்ளேகாலில் தேனீக்கள் கொட்டியதில் கூலி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனீக்கள் கொட்டியது

சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா கொங்கரஹள்ளி கிராமத்தை சோ்ந்தவர் சென்னப்பா (வயது 60). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் அதே கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் இறந்துவிட்டார். அந்த பெண்ணின் உடலை தகனம் செய்வதற்காக கிராமத்தை சேர்ந்தவர்கள் மயானத்திற்கு சென்றிருந்தனர். சென்னப்பாவும் சென்றிருந்தார்.

மயானத்தில் இறுதி சடங்கு செய்து, பெண் உடலுக்கு தீ வைத்தனர். அப்போது மரத்தில் கூடு கட்டி இருந்த தேனீக்கள் மீது தீ பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தேன்கூடு கலைந்து, தேனீக்்கள் அங்கிருந்தவர்களை நோக்கி வந்தது. இதை பார்த்த அனைவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். ஆனால் தேனீக்கள் விடவில்லை. அனைவரையும் துரத்தி சென்று கொட்டியது.

தொழிலாளி சாவு

இதில் கூலி தொழிலாளி சென்னப்பா உள்பட 11 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த கிராம மக்கள் அனைவரையும் மீட்டு கொள்ளேகால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சென்னப்பா ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து கொள்ளேகால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சென்னப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து கொள்ளேகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்