மணிப்பூர் வீடியோ: பாதிக்கப்பட்ட பெண் கூறிய அதிர்ச்சி தகவல்
மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.;
இம்பால்,
மணிப்பூரில் உள்ள ஒரு மாவட்டத்தில் குகி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை ஒரு கொடூர கும்பல் நிர்வாணப்படுத்தி, சாலையில் அழைத்துச்சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது.
இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவை உடனே நீக்க வேண்டும் என டுவிட்டர் நிறுவனத்திற்கு இந்திய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, வீடியோவை நீக்க வேண்டும் எனவும் டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரக்கூடாது என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மணிப்பூர் பெண்களுக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்திய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ள நிலையில், முதற்கட்டமாக மணிப்பூர் டிஜிபியிடம் இந்திய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா விசாரணை விவரங்களை கேட்டறிந்துள்ளார்.
மேலும், காவல்துறை விசாரணை நடத்தியது தொடர்பாக முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த நிலையில் மணிப்பூரில் இரு பெண்கள் பலாத்கார சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபர் ஹேராதாஸ் (32) கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், மணிப்பூரில் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த பேட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த பெண் அளித்த பேட்டியில்,
எங்கள் கிராமத்தை அக்கும்பல் தாக்கும் போது போலீசாரும் அங்கு இருந்தனர். ஊரை தாண்டியதும், எங்களை அக்கும்பலிடம் விட்டுச்சென்றதே போலீசார் தான். அக்கும்பலில், என் சகோதரனின் நண்பன் உள்பட ஒருசிலரை மட்டுமே என்னால் அடையாளம் காட்ட முடியும் என்றார்.