பெங்களூருவில் சாலை பள்ளத்தால் விபரீதம் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதி பெண் படுகாயம்
பெங்களூருவில் சாலை பள்ளத்தால் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு: பெங்களூருவில் சாலை பள்ளத்தால் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சாலைகளில் பள்ளங்கள்
பெங்களூரு நகரில் எந்த சாலைக்கு சென்றதாலும் பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. இதன் காரணமாக பெங்களூருவில் உள்ள சாலைகளில் செல்வதற்கு வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் இதுவர 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கின்றனர்.
சாலை பள்ளங்களை மூடுவதற்கு மட்டும் மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காமலும், பள்ளங்களை மூடினாலும் ஓரிரு நாட்களில் பெயர்ந்து பள்ளங்களாக மாறிவிடும் சம்பவங்களும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், பெங்களூரு சாலை பள்ளத்தால் அரசு பஸ் மோதி பெண் உயிருக்கு போராடி வரும் சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விபரம் வருமாறு:-
அரசு பஸ் மோதி பெண் படுகாயம்
பெங்களூரு காயத்திரிநகரை சேர்ந்தவர் உமா (வயது 42).இவரது மகள் வனிதா (22). இவர்கள் 2 பேரும் நேற்று காலையில் ராஜாஜிநகர் வாட்டாள் நாகராஜ் ரோட்டில் உள்ள வணிக வளாகம் முன்பாக ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தனர். ஸ்கூட்டரை வனிதா ஓட்டினார். உமா பின்பக்க இருக்கையில் அமர்ந்திருந்தார். வாட்டாள் நாகராஜ் ரோட்டில் பள்ளங்கள் இருந்ததால், பள்ளத்தில் ஸ்கூட்டர் ஏறி, இறங்கி விடக்கூடாது என்பதற்காக வனிதா பிரேக் பிடித்து திருப்பினார்.
அந்த சந்தர்ப்பத்தில் பின்னால் வந்த கே.எஸ்.ஆர்.டி.சி. (அரசு) பஸ், ஸ்கூட்டர் மீது மோதியது. இதனால் தாயும், மகளும் ஸ்கூட்டரில் இருந்து கீேழ விழுந்தார்கள். இதில், உமாவின் காலில் அரசு பஸ் சக்கரம் ஏறி, இறங்கியதால் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். வனிதா லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். உடனே அங்கிருந்தவர்கள் உமாவை மீட்டு இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில்...
அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு உமாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு உமா மாற்றப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் குல்தீப்குமார் ஜெயின் விரைந்து வந்து விசாரித்தார்.
அப்போது வாட்டாள் நாகராஜ் ரோட்டில் உள்ள சாலை பள்ளத்தில் ஸ்கூட்டர் இறங்குவதை தவிர்க்கும் விதமாக வனிதா ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு திருப்பிய போது அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டதாக குல்தீப்குமார் ஜெயின் தெரிவித்தார்.
இதுகுறித்து மல்லேசுவரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் மாருதியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராட்டம்-பரபரப்பு
இதற்கிடையில், சாலை பள்ளத்தால் பெண் படுகாயம் அடைந்தது பற்றி அறிந்ததும் விபத்து நடந்த பகுதிக்கு ஆம்ஆத்மி கட்சியினர் வந்தனர். அவர்கள், பெங்களூருவில் இருக்கும் சாலை பள்ளங்களை மூட மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சிக்கு எதிராகவும் ஆம்ஆத்மி கட்சியினர் கோஷங்களை எழுப்பினார்கள்.
அந்த கட்சியினருடன் சேர்ந்து கன்னட அமைப்பை சேர்ந்தவர்களும் விபத்து நடந்த பகுதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது. அவர்களிடம் போலீசார் சமாதானமாக பேசி அனுப்பி வைத்தார்கள்.
டிரைவர் என்ன சொல்கிறார்?
இதுபற்றி விபத்துக்கு காரணமான அரசு பஸ்சை ஓட்டி வந்த டிரைவரான மாருதி கூறுகையில், வாட்டாள் நாகராஜ் சாலையில் காலை நேரத்தில் போக்குவரத்து நெரிசல் இருந்ததால், அனைத்து வாகனங்களும் மெதுவாக தான் வந்தது. ஸ்கூட்டர் ஓட்டிய பெண், சாலையில் இருந்த பள்ளத்தில் ஸ்கூட்டர் விழுந்து விடக்கூடாது என்பதற்காக வலது புறமாக திருப்பினார். அந்த சந்தர்ப்பத்தில் தான் ஸ்கூட்டர் மீது பஸ் மோதியது. விபத்திற்கு சாலை பள்ளமே காரணம், என்றார்.
===========