மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி குறைப்பா? - மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு நிதி குறைக்கப்பட்டதா? என்பது குறித்து மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர் விளக்கம் அளித்தார்.

Update: 2023-02-08 03:25 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மத்திய பட்ஜெட் குறித்து மத்திய தகவல் ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக்சிங் தாக்கூர் டெல்லியில் நேற்று சில குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தனிநபர் வருமானம் உயர்வு

ஏழை, எளிய மக்களின் மேம்பாடு மற்றும் பெண்கள், இளைஞர்கள் நலனை கருத்தில்கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு உள்ளது. சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ள மக்களை கவனத்தில் கொண்டே பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

கடந்த 8 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் கணிசமாக உயர்ந்துள்ளது. மூலதனச்செலவு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி உயர்த்தப்பட்டு இருக்கிறது. ரெயில்வே பட்ஜெட், கடந்த 2014-ம் ஆண்டை காட்டிலும் 9 மடங்கு அதிகரித்து உள்ளது.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்துக்கும் கணிசமாக நிதி வழங்கப்பட்டு உள்ளது. மூலதனச் செலவுகள் மூலம் வேலைவாய்ப்பு அதிகமாகும் என்று அவர் கூறி னார்.

கேள்வி-பதில்

இதனைத்தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் வலியுறுத்தப்படுகிறது. இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்?.

பதில்:- இமாச்சலபிரதேச தேர்தலின்போது பழைய ஓய்வூதியத்தை காங்கிரஸ் கட்சி வாக்குறுதியாக அளித்தது. ஆனால் இப்போது என்ன ஆனது? அதற்கு நிதி இல்லை என்கிறார்கள்.

தமிழ்நாட்டில் மாநாடு

கேள்வி:- இளைஞர்களுக்காக ஜி20-ன் கீழ் நடத்தப்படும் இளையோர் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெறுமா?.

பதில்:- இளையோர் மாநாடு தொடர்பாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. நாடு முழுவதும் 750-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடைபெறும். இதில் இளைஞர்கள் பங்கேற்பார்கள். நீடித்த வளர்ச்சி, காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு பற்றி விவாதங்கள் நடத்தப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் இது தொடர்பாக கூட்டங்கள் நடத்தப்படும். அப்படி நடக்கும்போது தமிழ்நாட்டிலும் கூட்டம் நடக்கும்.

ஊரக வேலைவாய்ப்பு திட்டம்

கேள்வி:- மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் (100 நாள் வேலை திட்டம்) நிதி குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறதே?.

பதில்:- அது தவறு. காங்கிரஸ் ஆட்சியில் ரூ.30 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் நாம் கொரோனா காலத்தில்கூட ரூ.1 லட்சத்து 14 ஆயிரம் கோடி ஒதுக்கினோம். கடந்த ஆண்டுகூட ரூ.99 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. தேவைக்கேற்ப நிதி ஒதுக்கப்படும். இதில் நிதி பற்றாக்கறை இல்லை. எப்போதும் வழங்க தயாராக இருக்கிறது. எதிர்காலங்களிலும் தொடர்ந்து நிதி ஒதுக்கப்படும்.

கேள்வி:- மல்யுத்த விளையாட்டில் உள்ள பிரச்சினைகளின் (பாலியல் பிரச்சினைகள்) தற்போதைய நிலை என்ன?.

பதில்:- அதற்கான கமிட்டி தொடர்ந்து கூட்டம் நடத்திக்கொண்டு இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் கொடுக்கப்பட்டு உள்ளது. கமிட்டியிடம் அவர்கள் விரிவான விளக்கம் அளிக்கலாம்.

தமிழ்நாட்டுக்கு அதிக நிதி

கேள்வி:- நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சிகள் அலுவல் நேரங்களை தொடர்ந்து வீணடித்துக்கொண்டிருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்?.

பதில்:- சாதாரண மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை. அலுவல் நாட்களை உருப்படியாக பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் சில கட்சிகள் நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற வேண்டும் என எதிர்பார்க்கின்றன.

கேள்வி:- பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கான குறிப்பிடும்படியான திட்டங்களை சொல்லுங்களேன்?

பதில்:- மாநில விவரங்கள் பற்றி தனித்தனியாக தகவல்கள் வழங்கப்படும். பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தந்திருப்பார். தி.மு.க. அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசைவிட நாங்கள் தமிழ்நாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கி இருக்கிறோம் என்று அவர் பதில் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்