நீட் தேர்வு விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா? - ரவிசங்கர் பிரசாத்
நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு நேற்று தெரிவித்திருந்தது.
புதுடெல்லி,
இளநிலை மருத்துவப் படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு. கருணை மதிப்பெண். 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது. ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்தன. நீட் தொடர்பாக தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் மொத்தமாக சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து வருகிறது.
நீட் தேர்வை ரத்து செய்யும் அளவுக்கு போதிய முகாந்திரம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. மேலும், மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நியாயமானது இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மக்களவையில் நீட் தேர்வு முறையை மோசடி என்று தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று மன்னிப்பு கேட்பாரா என்று பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் மத்திய மந்திரி ரவிசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, "நீட் தேர்வில் மோசடி செய்துள்ளதாக ராகுல் காந்தி மக்களவையில் கூச்சலிட்டு வருகிறார். நம் நாட்டின் தேர்வு முறையை அவர் களங்கப்படுத்த விரும்புகிறாரா? அவரது வார்த்தைகள் நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும், அவர் வகிக்கும் பதவியின் கண்ணியத்தையும் மீறுவதாகும். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை ஏற்று ராகுல் காந்தி மன்னிப்பு கேட்பாரா?. தேர்தலில் மக்கள் அவரையும் அவரது கட்சியையும் பலமுறை நிராகரித்திருந்தால் அது பாஜகவின் தவறு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.