சிவமொக்காவில் விமான சேவை தொடங்குவது எப்போது? ராகவேந்திரா எம்.பி. பதில்

சிவமொக்கா விமான நிலையத்தில் விமான சேவை தொடங்குவது எப்போது என்பதற்கு ராகவேந்திரா எம்.பி. பதில் அளித்துள்ளார். சிவமொக்கா விமான நிலையம்

Update: 2023-04-28 18:45 GMT

சிவமொக்கா-

சிவமொக்கா விமான நிலையத்தில் விமான சேவை தொடங்குவது எப்போது என்பதற்கு ராகவேந்திரா எம்.பி. பதில் அளித்துள்ளார்.

சிவமொக்கா விமான நிலையம்

கர்நாடகத்தின் மலைநாடு மாவட்டமான சிவமொக்கா அருகே சோகானே பகுதியில் புதிதாக விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலைய கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி, விமான நிலையத்தை திறந்து வைத்தார். அந்த விமான நிலையத்தின் மேற்கூரை தாமரை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூருவுக்கு அடுத்தப்படியாக பெரிய விமான நிலையமாகவும், இரவிலும் விமானங்கள் வந்து செல்லும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

சிவமொக்கா விமான நிலையம் திறப்பு விழா கண்டு 2 மாதங்கள் ஆகியும் இன்னும் அங்கு விமான சேவை தொடங்கப்படவில்லை. இதனால் சிவமொக்கா விமான நிலையத்துக்காக காத்திருந்த மக்கள், தற்போது எப்போது விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்த்து காத்துள்ளனர்.

3 நவீன தீயணைப்பு வாகனங்கள்

இந்த நிலையில், சிவமொக்காவில் நேற்று முன்தினம் ராகவேந்திரா எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சிவமொக்கா விமான நிலையத்தில் விமான சேவை எப்போது தொடங்கப்படும் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

சிவமொக்கா விமான நிலையத்தில் இன்னும் சில பணிகள் முடிவடையாமல் உள்ளது. சிவமொக்கா-பெங்களூரு இடையே விமான போக்குவரத்து தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான விமான கட்டணம் அதிகமாக இருப்பதால் அதனை குறைக்கும்படி விமான நிலைய நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிவமொக்கா விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு ரூ.2 கோடி மானியம் வழங்கப்பட உள்ளது. இங்கு வந்து செல்லும் விமானங்களின் பாதுகாப்புக்காக ரூ.12 கோடி செலவில் 3 நவீன தீயணைப்பு வாகனங்கள் துபாயில் இருந்து வாங்கப்பட்டுள்ளது. அந்த தீயணைப்பு வாகனங்கள் துபாயில் இருந்து கப்பலில் மும்பை துறைமுகத்துக்கு வந்துள்ளது. அதனை சிவமொக்காவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

விரைவில் தொடக்கம்

சிவமொக்கா-பெங்களூரு இடையே விமான சேவை தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது. விமான போக்குவரத்துக்கான நேர கால அட்டவணையும் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், விமான போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. சிவமொக்கா-பெங்களூரு இடையே விரைவில் விமான சேவை தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்