ஓடும் ரெயிலில் 4 பேரை சுட்டுக்கொன்ற ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் - அதிர வைக்கும் காரணம்...!
ஓடும் ரெயிலில் உயர் அதிகாரி, 3 பயணிகள் என மொத்தம் 4 பேரை ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் சுட்டுக்கொன்றார்.
மும்பை,
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மராட்டிய மாநிலம் மும்பைக்கு கடந்த திங்கட்கிழமை ஜெய்ப்பூர்-மும்பை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அதிகாலை 5 மணியளவில் மராட்டியத்தின் பஹல்கர் மாவட்டம் அருகே ரெயில் வந்தபோது ரெயிலில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் சேத்தன் சிங் (வயது 33) தனது உயர் அதிகாரி மற்றும் 3 பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
சேத்தன் சிங் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ரெயில்வே பாதுகாப்புப்படை உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனா, பயணிகள் அப்துல் குவாதிர்பாய் முகமது ஹுசன், அக்தர் அப்பாஸ் அலி, சதர் முகமது ஹுசன் ஆகிய 4 பேர் உயிரிழந்தனர்.
துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு ரெயிலில் இருந்து குதித்து தப்பியோட முயற்சித்த சேத்தன் சிங்கை சக வீரர்கள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சேத்தன் சிங் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், உயர் அதிகாரி மற்றும் பயணிகள் மீது ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் தொடர்பான அதிரவைக்கும் காரணங்கள் தற்போது தெரியவந்துள்ளன.
ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் சேத்தன் சிங் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், ரெயிலில் இருந்து உடனடியாக இறங்க நினைத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், பணியை நிறைவு செய்துவிட்டு செல்லும்படி சேத்தன் சிங்கிடம் உயர் அதிகாரி திகாராம் மீனா கூறியுள்ளார். இதனால், திகாராம் மீனா மீது சேத்தன்சிங் மிகுந்த கோபத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக சேத்தன் சிங் உடன் பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர் ஹன்ஷியாம் ஆச்சாரியா கூறியதாவது:-
நான் (ஹன்ஷியாம்), திகாராம் மீனா (வயது 58), சேத்தன் சிங் (வயது 33), நரேந்திர தர்மர் (வயது 58) ஆகியோர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். நாங்கள் மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சூரத் ரெயில் நிலையத்தில் அதிகாலை 2.53 மணிக்கு ஏறினோம். திகாராம் மீனாவும், சேத்தன் சிங்கும் ரெயிலின் ஏசி வகுப்பில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
நானும், நரேந்திர தர்மரும் ஸ்லீப்பர் கோச்சில் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தோம். பணியை தொடங்கி 30 நிமிடங்கள் கழித்து நான் உதவி சப்-இன்ஸ்பெக்டர் திகாராம் மீனாவிடம் பணி நடவடிக்கைகளை கூற சென்றேன். அப்போது, அங்கு சேத்தன் சிங்கும், 3 டிக்கெட் பரிசோதகர்களும் இருந்தனர்.
சேத்தன் சிங்கிற்கு உடல்நலம் சரியில்லை என திகாராம் என்னிடம் கூறினார். உடனடியாக நான் சேத்தன் சிங்கின் கழுத்தில் கை வைத்து காய்ச்சல் அடிக்கிறதா? என்று பார்த்தேன். ஆனால், அவ்வாறு எனக்கு எதுவும் தெரியவில்லை. அடுத்த ரெயில் நிலையத்தில் ரெயிலில் இருந்து கீழே இறங்க வேண்டுமென சேத்தன் சிங் நினைத்தார். ஆனால், பணி நிறைவு பெற இன்னும் குறைந்தது 2 மணி நேரம் உள்ளது என சேத்தன் சிங்கிடம் உயர் அதிகாரி திகாராம் கூறினார்.
ஆனால், திகாராமின் பேச்சை சேத்தன் சிங் கேட்கவில்லை. இதனால், திகாராம் எங்கள் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தார். அவர் மும்பையில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, சேத்தன் சிங் பணியை முழுமையாக நிறைவு செய்ய வேண்டுமெனவும், உடல்நலக்குறைவுக்கு மும்பையில் சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறும் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து வந்த உத்தரவை உயர் அதிகாரி திகாராம், சேத்தன் சிங்கிடம் கூற முயற்சித்தார். ஆனால், அதை சேத்தன் சிங் கேட்கவில்லை.
இதனால், சேத்தன் சிங்கிற்கு 'டிரிங்ஸ்' வாங்கி வரும்படி திகாராம் என்னிடம் கூறினார். ஆனால், சேத்தன் அதை வாங்கவில்லை.
பின்னர், சேத்தன் சிங்கின் துப்பாக்கியை வாங்கிக்கொள்ளுங்கள். அவர் சற்று நேரம் ஓய்வு எடுக்கட்டும் என திகாராம் என்னிடம் கூறினார். ஆகையால் சேத்தன் சிங்கை நான் பி4 கோச்சுக்கு அழைத்து சென்றேன். அவரை காலியாக இருந்த இருக்கையில் படுத்து உறங்கும்படி கூறிவிட்டு அவர் அருகே உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தேன்.
ஆனால், சேத்தன் சிங் வெகுநேரம் உறங்கவில்லை. 10 நிமிடம் கழித்து, தன் துப்பாக்கியை தரும்படி சேத்தன் சிங் என்னிடம் கேட்டார். நான் கொடுக்க மறுத்தேன். ஓய்வு எடுக்கும்படி கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த அவர் என் கழுத்தை நெரித்தார். என்னிடம் இருந்த துப்பாக்கியை பறித்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். அவர் என் துப்பாக்கியை மாற்றி எடுத்துக்கொண்டு செல்வதை நான் உணர்ந்தேன்.
உடனடியாக, என் உயர் அதிகாரிகளிடம் கூறினேன். தொடர்ந்து நானும் உயர் அதிகாரி திகாராமும், சேத்தன் சிங்கிடம் சென்று துப்பாக்கியை மாற்றி எடுத்து வந்துவிட்டதாக கூறினோம். இதனால், சேத்தன் சிங் அவரிடமிருந்த என் துப்பாக்கியை என்னிடம் கொடுத்தார். அவருடைய துப்பாக்கியை என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார். நிலைமையை எடுத்துக்கூற உயர் அதிகாரி திகாராம் முயற்சித்தார், ஆனால் சேத்தன் சிங் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். எங்களின் பேச்சை அவர் கேட்கவில்லை. இதனால் நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
நான் அங்கிருந்து வெளியேறும்போது சேத்தன் சிங் தனது துப்பாக்கியின் பாதுகாப்பு பிடியை நீக்குவதை கண்டேன். அவர் துப்பாக்கிச்சூடு நடத்த தயாராகிறார் என்பது எனக்கு புரிந்து விட்டது. உயர் அதிகாரி திகாராம் மற்றும் சேத்தன் சிங்கிடம் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு சிறிது நேரத்தில் அங்கிருந்து சென்றேன்.
ரெயில் 5.25 மணியளவில் வைடர்னா ரெயில் நிலையம் அருகே வரும்போது சக வீரர் எனக்கு போன் செய்து திகாராம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறினார். உனக்கு எப்படி தெரியும்? என நான் கேட்டேன். அதற்கு ரெயில்வே ஊழியர் கூறியதாக என்னிடம் அவர் தெரிவித்தார். உடனடியாக நான் பி5 கோச்சை நோக்கி ஓடினேன். சில பயணிகள் என்னை நோக்கி ஓடி வந்தனர். பயணிகள் பயத்தில் இருந்தனர். அவர்கள் ரெயில்வே பாதுகாப்புப்படை வீரர், உயர் அதிகாரியை சுட்டுவிட்டதாக கூறினர். நான் உடனடியாக நரேந்திர தர்மருக்கு போன் செய்து அவர் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தேன். கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமை குறித்து எச்சரித்தேன்.
பி1 கோச் அருகே தனது துப்பாக்கியுடன் சேத்தன் சிங் மிகவும் கோபமாக நின்று கொண்டிருந்தார். அவர் என்னையும் துப்பாக்கியால் சுட்டுவிடுவார் என நான் நினைத்தேன். ஆகையால் நான் திரும்பிக்கொண்டேன். 10 நிமிடம் கழித்து யாரோ ரெயிலின் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர். இது மீர் ரோட் மற்றும் தஹிர்சர் ரெயில் நிலையம் இடையேயான பகுதி என செல்போனில் செயலி மூலம் நான் பார்த்தேன். பின்னர், கதவு வழியாக எட்டிப்பாத்தபோது சேத்தன் சிங் துப்பாக்கிச்சூடு நடத்த தயாரானார்.
உடனடியாக, ரெயிலின் ஜன்னல்களை மூடிவிட்டு தலையை குனிந்து இருக்கும்படி பயணிகளிடம் நான் கூறினேன். எனக்கு துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. நான் கழிவறையில் ஒளிந்து கொண்டேன். நான் சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தபோது சேத்தன் சிங் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரின் கையில் துப்பாக்கி இன்னும் இருந்தது. ரெயில் 15 நிமிடம் கழித்து மீண்டும் புறப்பட்டது.
நான் ரெயில் பேட்டியின் பி5, பி6 கோச் நோக்கி நடந்து செல்லும்போது 3 பயணிகள் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டேன்' என்றார்.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு நடத்திய சேத்தன் சிங் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு மனநல பரிசோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயர் அதிகாரியுடனான வாக்குவாதத்தால் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.